ஜோரான பச்சடி வகைகளை செய்து அசத்துவோமா?

Pachadi recipes...
Pachadi recipes...
Published on

பிரியாணி வகைகளோ, சப்பாத்தி வகைகளோ, சாத வகைகளோ எதுவாக இருந்தாலும் தொட்டுக்கொள்ள பச்சடி வகைகள் இருந்தால் இன்னும் அது சுவையாக உள்ளே இறங்கும். எப்போதும் வெங்காய பச்சடிதானா என அலுப்பவர்களுக்கு விதவிதமான பச்சடி வகைகளை செய்து தந்து அசத்துங்கள். 

தக்காளி பச்சடி
செய்முறை - நான்கு தக்காளிகளை
அழகான வட்ட வடிவம் அல்லது சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை நீள வாட்டத்தில் பொடியாக வெட்டிக் கொள்ளவும். தக்காளி வெங்காயத்தை உப்புடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பிசிறி சிறிது நேரம் ஊறவைத்து நறுக்கிய பச்சை மிளகாய், மல்லித்தழையுடன் பரிமாறவும். 

முளைகட்டிய பாசிப்பயிறு பச்சடி
செய்முறை-
இரவே ஊறவைத்து முளைகட்டிய பாசிப்பயிரை பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று, பச்சை மிளகாய் இரண்டு, கொத்தமல்லி தழை நறுக்கியது ஆகியவை கலந்து கெட்டித் தயிரில் போட்டு உப்பு சேர்த்து கடுகு தாளித்து பரிமாறலாம்.

பீட்ரூட் பச்சடி
செய்முறை-
வேகவைத்த துருவிய பீட்ரூட்டை பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்துடன் சிறிது உப்பு ,மிளகு தூள், எலுமிச்சம் பழச்சாறு விட்டு நன்கு கலந்து மேலே மல்லித்தழை தூவி சிறிது நேரம் ஊறியபின் சாப்பிடலாம். சுவைக்கு சிறிது சர்க்கரை சேர்க்கவும். துருவிய கேரட்டையும் இதே போல் செய்யலாம்.

வெள்ளரிக்காய் பச்சடி
செய்முறை-
இரண்டு வெள்ளரிக்காயை கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் சிறிது ஊற்றி கடுகு ,உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு தாளித்து வெள்ளரிக்காயுடன் சேர்க்கவும். இதனுடன் உப்பு பொடியாக நறுக்கிய மிளகாய் சேர்த்து தயிரில் ஊறவைத்து மல்லித்தழை சேர்த்துப்  பரிமாறினால் சுவை அள்ளும்.

கோஸ் பச்சடி
செய்முறை
- முற்றிய முட்டைகோஸ் இல்லாமல் இளம் கோஸை நீளவாக்கில்  குச்சிகள் போன்று பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு போட்டு சிவந்ததும் நறுக்கிய முட்டை கோஸைப்  போட்டு ஒரு தடவை கிளறி எடுக்கவும். அதனுடன் உப்பு, மிளகாய் நறுக்கிப் போட்டு தயிர் சேர்த்துப் பரிமாறவும். இதனுடன் துருவிய கேரட் சேர்த்தால் அழகிய வண்ணத்துடன் சாப்பிடப் பிடிக்கும்.

காலிஃப்ளவர் பச்சடி
செய்முறை-
காலிஃப்ளவரை சிறிது சிறிதாக நறுக்கி ஆவியில் அரைவேக்காடு வேகவைத்து வடித்து அதை கெட்டித் தயிரில் உப்பு, மிளகாய், பொடித்த சீரகம் தூள் கலந்து நறுக்கிய மல்லி தலையை போட்டு ஊறவைத்து பரிமாறவும். இது வித்தியாசமான சுவையுடன் இருக்கும் ஒரு பச்சடி.

இதையும் படியுங்கள்:
பெங்காலி ஸ்பெஷல் ரசகுல்லா-நேந்திரம் சிப்ஸ் வீட்டிலேயே செய்யலாம் வாங்க!
Pachadi recipes...

வெங்காய பச்சடி
செய்முறை-
நீளமாக வெட்டிய பெரிய வெங்காயத்தை உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். பின்னர் வெங்காயத்தை தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுத்து அதில்  கெட்டித் தயிர் மல்லித்தழை, தேவையான உப்பு சேர்த்து பரிமாறலாம். தயிர் சேர்க்காமல் வெறும் எலுமிச்சம் பழச்சாற்றிலும் வெங்காயத்தை ஊற வைத்தும் தரலாம். 

நெல்லிக்காய் பச்சடி
செய்முறை-
சிறிய நெல்லிக்காய் தேவையான அளவு எடுத்து அதிலிருந்து கொட்டைகளை நீக்கி பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக்கொண்டு. சிறிது தேங்காயை துருவிக் கொள்ளவும். சிறிது எண்ணெயில் பச்சை மிளகாய் வதக்கி இவை எல்லாவற்றையும் அரைத்து தயிரில் கலந்து  இத்துடன் தேவையான உப்பை போட்டு கடுகை தாளித்துக் கொட்டி தயிர் சாதத்துடன் பரிமாறினால் "நச்"சென்று இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com