

தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவே இட்லி, தோசை தான். இந்த டிஷ் பலரது வீடுகளில் தினம் தினம் இடம்பெற்றுவிடும். இல்லத்தரசிகளுக்கு தெரிந்த முதல் உணவு, ஈஸியான உணவு இட்லி, தோசை தான். மாவு அரைத்து வைத்தால் போதும் 2-3 நாட்களுக்கு டிபன் கவலை இல்லை என்று தான் பல பெண்கள் நினைப்பார்கள். அப்படி நம் வாழ்வில் இந்த உணவு இன்றியமையாததாக இருந்தாலும் கூட, பல பெண்களுக்கு இருக்கும் கவலை, தோசைக்கல்லில் தோசை ஒட்டாமல் வரவேண்டுமே என்பதுதான்.
என்னதான் தோசை தினசரி சுட்டாலும், ஒரு நாள் கல் நமக்கு சாதகமாக இருக்கும், மறுநாள் சதி செய்யும். கல்லில் ஒட்டி கொள்வதால் தோசை முழுமையான வட்டமாக வராது. இது பலரது வீடுகளிலும் உள்ள பெருங்கவலை! இதை எப்படி ஈஸியாக சரி செய்வது என்று பார்க்கலாம் வாங்க..
இதற்கு தேவையான பொருட்கள் நம் வீட்டில் தினசரி பயன்படுத்தும் உப்பும், தேங்காய் எண்ணெயும் தான். கல் உப்பு இருந்தால் மிகவும் நல்லது. தூள் உப்பை கூட பயன்படுத்தலாம் தவறில்லை.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடாக்கவும். ஆவி பறக்கும் நேரத்தில் அதில் 4 முதல் 5 ஸ்பூன் வரை உப்பை சமமாக கொட்டி பரப்பி வைக்கவும். இதில் உள்ள ஈரப்பதம் கல்லில் உள்ள சிறிய துகள்களை அகற்றிவிடும். பிறகு அடுப்பை ஆஃப் செய்துவிடவும். அதையடுத்து அந்த உப்பை கொண்டே பாத்திரம் கழுவுவது போல், அந்த தோசை கல்லை நன்றாக தேய்த்து விடவும்.
இதன் பிறகு உப்பை முழுவதுமாக நீக்கிவிட்டு. மீண்டும் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும். சூடான பிறகு தேங்காய் எண்ணெய்யை தேவையான அளவு ஊற்றி நன்கு தேய்த்து உலர வைக்கவும்.
அவ்வளவு தான் தோசைகல் சூப்பராக மாறிவிடும். இனி உங்கள் பேச்சை கேட்கும். எனவே வீட்டில் உள்ள இந்த 2 பொருட்களை வைத்தே உங்கள் தோசைக்கல்லை புதிதாக மாற்றிவிடலாம். இனி ஈஸியாக உங்களால் தோசை சுட முடியும். அழகான வட்டமாகவும், மொறு மொறுவென சுவையாகவும் இருக்கும்.
