
பெண்கள், ஆண்கள் என அனைவருக்கும் தினசரி இருக்கும் பெரும் பிரச்சனைகளில் ஒன்று சமையல் தான். அன்றாட வாழ்க்கையில் சாப்பாடு நமக்கு மிகவும் முக்கியமானதாகும். தினசரி என்ன சமைக்க வேண்டும் என்பதே பலரின் யோசனையாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக டிபனுக்கு சைடிஸ் செய்வது பெரும் கவலையாகவே உள்ளது.
பெரும்பாலான மக்கள் தக்காளி சட்னி, வெங்காய சட்னி, தேங்காய் சட்னியே செய்கின்றனர். அதிலும் வேலை சென்றுவிட்டு வீடு திரும்பும் பெண்கள், ஆண்கள் தோசை ஊற்றி சட்னி செய்வது பெரும் சிரமமாக பார்க்கின்றனர். இந்த சிரமத்தை போக்கும் வகையில், எளிதாக இன்ஸ்டண்ட் சட்னி பொடி செய்து வைத்து கொள்ளுங்கள். இதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தண்ணீரில் கலந்து கொண்டு சாப்பிடலாம். இனி சட்னி அரைக்கும் பிரச்சனைக்கு குட்பை சொல்லுங்கள்.
இன்ஸ்டண்ட் சட்னி பொடி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
வேர்கடலை - 1 கப்
பொரிகடலை - 1 கப்
உளுந்து - 1 கப்
துருவிய தேங்காய் - 1 கப்
கருவேப்பிலை - 1 கைபிடி
பூண்டு - 5 பற்கள்
காய்ந்த மிளகாய் - 5
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, வேர்க்கடலை, பொரிகடலை, உளுந்து ஆகியவற்றை போட்டு பொன் நிறம் ஆகும் வரை வதக்கவும், பிறகு அதை ஒரு பாத்திரத்தில் போட்டு ஆற வைக்கவேண்டும். பிறகு அதே கடாயில் துருவிய தேங்காய், கருவேப்பிலை, பூண்டு தோளோடு போட்டு மீடியம் ஃப்ளேமில் வதக்கவும். தேங்காயில் உள்ள தண்ணீர் தன்மை போகும் வரை நன்கு வதக்க வேண்டும். தேங்காய் கறி பிடித்து விடாமல் வதக்கவேண்டும். பிறகு தனியாக காய்ந்த மிளகாயை போட்டு வதக்க வேண்டும். இப்படி வதக்கிய பிறகு அனைத்தையும் ஒரு மிக்சி ஜாரில் போட்டு தேவையான அளவு கல்லு உப்பு சேர்த்து கொரகொரப்பான தன்மையில் அரைத்து வைத்து கொள்ள வேண்டும்.
குறிப்பு: தண்ணீர் சேர்த்துவிடக்கூடாது. அனைத்து பொருட்களும் ஈரத்தன்மை கொண்டதாக இருக்கக்கூடாது.
பிறகு அரைத்த பொடியை ஒரு டைட் பாக்ஸில் அடைத்து வைத்து கொள்ள வேண்டும். குறைந்தது 10 நாட்கள் வரை இந்த சட்னி பொடி உங்களுக்கு உதவும். இப்போது நீங்கள் டிபன் செய்து விட்டு இந்த சட்னி பொடியில், தேவையான அளவு தண்ணீர் சேர்த்தால் சட்னி ரெடி ஆகிவிடும். இனி உங்களுக்கு சட்னி செய்ய வேண்டிய கவலைஇல்லை.