
பிள்ளைகளுக்கு விடுமுறை விட்டாயிற்று. பொதுவாகவே குழந்தைகளுக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் கடைகளில் வாங்கி தருவது சுகாதாரமாக இருக்குமா என்ற கவலையும் நமக்கு இருக்கும். கொஞ்ச நேரம் செலவழித்தால் வீட்டிலேயே அல்வா வகைகளை செய்து ஒரு கிண்ணத்தில் சிறு ஸ்பூன் போட்டு தந்துவிட்டால் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்துடன் சத்தான இனிப்பு சாப்பிட்ட திருப்தியும் கிடைக்கும். நேரமும் கடக்கும். இதோ உங்களுக்காகவே சில அல்வா வகைகள்.
பால் அல்வா
தேவை:
நெய்- 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 1/4கிலோ
பால் - 2 லிட்டர்
முந்திரி பருப்பு - 1டேபிள்ஸ்பூன்
சிட்ரிக் ஆசிட் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
அடிகனமான கடாயில் பாலை ஊற்றி நன்கு வற்ற காய்ச்சவும். அது சர்க்கரை மற்றும் சிட்ரிக் ஆசிட் கலந்து சிறிது நேரம் காய்ச்சவும். முந்திரியை இரு பகுதிகளாகப் பிரித்து ஒரு பகுதியை நெய்யில் வறுத்து சேர்க்கவும். அத்துடன் கரகரப்பாக பொடித்த முந்திரி பருப்பையும் சேர்த்து பால் திரிந்து அல்வா பதத்தில் கெட்டியானதும் மேலே நெய் ஊற்றி சுருண்டு வந்ததும் இறக்கவும்.
கோதுமை அல்வா
தேவை:
சம்பா கோதுமை - 250 கிராம்
சர்க்கரை - 750 கிராம்
நெய்- 25 கிராம்
முந்திரி பருப்பு- 50 கிராம்
ஏலக்காய் - ஒரு டீஸ்பூன்
எலுமிச்சம் பழம் - அரை மூடி
செய்முறை:
சம்பா கோதுமையக் கழுவி இரவே மூழ்குமளவு நீரில் ஊறவைத்து மறுநாள் காலை மூன்று முறை ஆட்டிப் பிழிந்து பால் எடுக்கவும். பாலும் தண்ணீரும் சேர்ந்து ஒரு லிட்டர் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். மாலையில் உருளி அல்லது அடிகனமான கடாயை அடுப்பில் வைத்து தயார் செய்து வைத்திருக்கும் கோதுமை பாலில் சர்க்கரையை கொட்டி கூடவே சிறிது ஆரஞ்ச் அல்லது சிவப்பு கலர் பொடி சேர்த்து அடிப்பிடிக்காமல் கிண்டிகா கொண்டே இருக்கவும்.
எல்லாம் கலந்து சுண்டி கெட்டியாகும்போது சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறவும்.
அல்வா பதம் வரும்போது நெய் கக்க ஆரம்பிக்கும். அப்போது சிறு எலுமிச்சம்பழம் சாறு பிழிந்து பொடியாக்கிய ஏலத்தூள் கலந்து சிறிது நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு சேர்த்துக் கைவிடாமல் கிண்டவும். நெய் ஊற்றிய பிறகு சுமார் அரைமணி நேரம்வரை கிண்டி இறக்கவும். கை விடாமல் கிண்டுவது அவசியம். அதிகப்படியான நெய் இருந்தால் தனியாக வடித்து வைத்துவிடலாம்.
கராச்சி அல்வா
தேவை:
மைதா - 1/4கிலோ
சர்க்கரை - 3/4 கிலோ
நெய் - 1/4 கிலோ
ஜாதிக்காய் பொடி - 1/4டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 25 கிராம்
பிஸ்தா - 25 கிராம்
ஏலக்காய் தூள் - 2/2 டீஸ்பூன்
செய்முறை:
சர்க்கரையை கம்பி பதம் வரும் வரை காய்ச்சி மைதாவை சிறிது நீரில் கரைத்து கட்டிப்படாமல் கிளறவும் அடிக்கடி நெய் விட்டு கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும். மிதமான தீயில் இருப்பது அவசியம். முந்திரி பருப்பு பிஸ்தா பருப்பு போன்றவற்றை நெய்யில் வறுத்து அத்துடன் ஜாதிக்காய் பொடியும் ஏலக்காய் பொடியும் சேர்த்து அல்வா பதம் வரும்வரை கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் கீற்று போடலாம். இல்லையெனில் அல்வாவாக பாத்திரத்தில் எடுத்து வைக்கலாம்.