
அவல் ஸ்பான்ச் ஊத்தப்பம்:
அவல் 1 கப்
புழுங்கலரிசி 2 கப்
புளித்த மோர் 2 கப்
உப்பு தேவையானது
கெட்டி அவல் ஒரு கப் எடுத்து ஒரு மணிநேரம் ஊறவிடவும். புழுங்கல் அரிசியை ரெண்டு கப் மோர், சிறிதளவு தண்ணீர் விட்டு இரண்டு மணிநேரம் தனியாக ஊறவைக்கவும். பிறகு இவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும். தேவையான உப்பு சேர்த்து இரண்டு மணி நேரம் புளிக்க வைத்து சிறிது கனமான ஊத்தப்பம்போல் தோசை வார்க்க பட்டுட்டாக ஸ்பாஞ்சு போல் தோசை அருமையாக இருக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி மிகவும் பொருத்தமாக இருக்கும்.
மிக்ஸட் மசாலா பூரி:
கடலை மாவு 1/2 கப்
அரிசி மாவு 4 ஸ்பூன்
கோதுமை மாவு 1/4 கப்
சீரகம் 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி சிறிது
கார பொடி 1/2 ஸ்பூன்
கரம் மசாலா 1/2 ஸ்பூன்
உப்பு தேவையானது
எண்ணெய் பொரிக்க
ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசி மாவு, கோதுமை மாவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, காரப்பொடி, கரம் மசாலா, சீரகம், உப்பு, 2 ஸ்பூன் சமையல் எண்ணெய் ஆகியவற்றை விட்டு கையால் நன்கு கலந்து விட்டுக்கொள்ளவும். தேவையான தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். மாவு பிசைந்ததும் ஊற விட வேண்டாம். அவற்றை சின்ன சின்ன உருண்டைகளாக எடுத்து உள்ளங்கை அளவு பூரிகளாக தேய்க்கவும்.
அடுப்பில் வாணலியில் எண்ணெய்விட்டு எண்ணெய் நன்கு சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து ஒவ்வொன்றாகப் போட்டு இரண்டு பக்கமும் திருப்பி விட்டு நன்கு வெந்து உப்பி வந்ததும் எடுக்கவும். சுவையான மசாலா பூரி தயார்.
இதற்கு தொட்டுக்கொள்ள கெட்டித் தயிரும், ஊறுகாயுமே பொருத்தமாக இருக்கும்..
கிரிஸ்பி ஸ்வீட்கார்ன் மசாலா:
ஸ்வீட் கார்ன் 2
உப்பு சிறிது
மிளகுத்தூள் 1/2 ஸ்பூன்
சாட் மசாலா 1 ஸ்பூன்
காரப்பொடி 1/2 ஸ்பூன்
அரிசி மாவு 1 ஸ்பூன்
சோள மாவு 1 ஸ்பூன்
மைதா மாவு 1 ஸ்பூன்
வெங்காயம் பாதி
சர்க்கரை (ருசிக்காக) 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி சிறிது
எண்ணெய் பொரிக்க
கார்ன் இரண்டையும் உரித்து முத்துக்களை எல்லாம் எடுத்துக் கொள்ளவும். வாணலியில் தண்ணீர் விட்டு உதிர்த்த கார்ன் போட்டு சிறிது உப்பு சேர்த்து சிறிது வேகவைத்து எடுக்கவும். நீரை வடித்து ஸ்வீட் கார்னை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அரிசி மாவு, சோள மாவு, மைதா மாவு, உப்பு, மிளகுத்தூள், காரப்பொடி பொடியாக சேர்த்து நன்கு கலக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கலந்து வைத்த ஸ்வீட் கார்னை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு மொறு மொறுப்பாகும் வரை நன்கு பொரித்தெடுக்கவும். பொரித்தெடுத்த ஸ்வீட் கார்னில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, சாட் மசாலா, மிளகுத்தூள், சிறிது உப்பு, 1/2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும். மிகவும் ருசியான கிரிஸ்பி ஸ்வீட் கார்ன் மசாலா தயார்.