
ஸ்வீட்டுகள் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்தக் கோடை விடுமுறையில் இதுபோன்ற எளிதாக செய்யும் பர்பி வகைகளை செய்து வைத்துவிட்டால் குழந்தைகள் போக வர சாப்பிடவும், அதே சமயம் சத்துக்கள் உள்ள சுகாதாரமான ஸ்நாக்ஸ் ஆகவும் ஆகிவிடும். இதோ அவர்களுக்காகவே சில பர்பி வகைகள்.
சைனா பர்பி
தேவை:
கடலை மாவு -1 கப்
மில்க் பவுடர் - 1 கப்
நெய்- 2 கப்
சர்க்கரை - 11/2 கப்
ஏலக்காய் - 15 அல்லது தேவையான அளவு
முந்திரி பருப்பு - 10
திராட்சை – தேவைக்கு
செய்முறை:
கடலை மாவை சலித்து வைத்துக்கொண்டு அடுப்பில் அடிகனமான வாணலி வைத்து அதில் ஒரு கப் நெய்யை ஊற்றி மிதமான தீயில் கடலை மாவை சிவக்க வறுத்து கீழே இறக்கி வைத்து மில்க் பவுடர் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி கம்பி பதம் வந்ததும் கடலை மாவு மில்க் பவுடர் கலவையை சிறிது சிறிதாக சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும்.
கிளறிக் கொண்டிருக்கும்போது சிறிது சிறிதாக மீதமுள்ள நெய் சேர்த்து கடாயில் ஒட்டாமல் பர்பியாக வந்ததும் நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, திராட்சை, பொடி செய்த ஏலக்காய்தூள் சேர்த்து கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் கட் செய்து எடுத்து வைக்கலாம்.
ரவை பர்பி
தேவை:
பொடி ரவை - 1 கப்
சர்க்கரை- 4 கப்
நெய் - 1 கப்
பால்- 4 கப்
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
அடிகனமான கடாயில் சின்ன ரவையை லேசாக வறுத்துக்கொண்டு அதனுடன் சர்க்கரை மற்றும் பால் ஊற்றிக் கலந்து சிறு தீயில் வைத்து கிளறவும். ஓரளவு கெட்டியானதும் ஏலக்காய்த்தூள் கலந்து நெய் ஊற்றி ஓரளவுக்கு மைசூர் பாகு பதத்தில் வந்ததும் இறக்கி நெய் தடவிய தட்டில் ஊற்றி ஒன்று போல் பரப்பி தேவையான அளவில் துண்டுகள் போட்டு எடுத்து வைக்கலாம்.
கோல்டன் ஜூப்ளி (மத்திய பிரதேச ஸ்வீட்)
தேவை:
கடலை மாவு - 200 கிராம்
சர்க்கரை - 100 கிராம்
நெய் அல்லது டால்டா - 200 கிராம்
முந்திரி - 50 கிராம்
ஏலக்காய் பொடி தூள் - 1/4டீஸ்பூன் முற்ளிய தேங்காய்- 1
செய்முறை:
கடாயில் தேங்காய் பூவை ஈரம் போக மிதமான தீயில் வறுத்துக்கொள்ளவும் முந்திரி பருப்பையும் ஒடித்து சிறிது நெய்யில் வறுத்துக்கொள்ளவும்.
கால் கப் நீரில் சர்க்கரை போட்டு பாகு காய்ச்சி கொதித்து வரும்போது தேங்காய் பூவையும் சேர்த்துக் கிளறவேண்டும். சிறிது நேரம் கழித்து சலித்த கடலை மாவைபோட்டு கைவிடாமல் கிளறவும். பின் மீதியுள்ள நெய்யையும் ஊற்றி நன்கு கிளறிக் கொண்டே இருக்கும் போது கலவை நுரைத்துக் கொண்டு பர்பி பதத்தில் ஒட்டாமல் வரும்போது வறுத்த முந்திரிப் பருப்பு, ஏலக்காய் தூள் கலந்து கிளறி நெய் தடவிய தட்டில் ஊற்றி ஆறிய பின் துண்டுகளாக வெட்டவும் இந்த கோல்டன் ஜூபிலி வித்தியாசமான சுவையுடன் சூப்பராக இருக்கும்.