
சூரியன் சுட்டெரிக்கும் கோடைக்காலம் வந்துவிட்டது. மார்ச் மாத தொடக்கத்திலேயே பகல் நேரத்தில் வெளியில் செல்ல முடியாத அளவிற்கு வெயில் வந்துவிட்டது. கோடை காலத்தில் நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள சிறந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேனல் கட்டிகள், வியர்குருக்கள் போன்றவை தொல்லை தராது.
இலை கீரைகள்:
கீரை, முட்டைகோஸ், லெட்யூஸ் போன்ற பச்சை இலை காய்கறிகள் அதிக நீர்சத்துக் கொண்டவை. இவை நம்மை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். சாலட்கள், ஸ்மூத்திகள், ஜூஸ் என செய்து சாப்பிட உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
சீரகத் தண்ணீர் மற்றும் வெந்தயத் தண்ணீர்:
சாதாரண தண்ணீருக்கு பதிலாக சீரகம் சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டிய தண்ணீரைப் பருகலாம். அதேபோல் இரவே 2 ஸ்பூன் வெந்தயத்தை 1 கப் நீரில் ஊறவைத்து காலையில் வடிகட்டி அந்த நீரைப் பருகிவர உடல் குளிர்ச்சி பெறும்.
நீராகாரம்:
இரவு மீந்த சோற்றில் நீர்விட்டு வைத்து காலையில் நீரை வடித்து அத்துடன் சிறிது பழைய சாதத்தையும் சேர்த்து நன்கு மசித்து உப்பு, மோர், சின்ன வெங்காயம் சேர்த்து பருக உடலுக்கு குளிர்ச்சி தரும்.
வெள்ளரிக்காய்:
கோடைக்கு ஏற்ற உடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரிக்காய் 95% தண்ணீர் உள்ளது. அதிக கலோரிகளற்ற பொட்டாசியம் சத்து நிறைந்த வெள்ளரிக்காய் வியர்வை மூலம் இழக்கும் எலக்ட்ரோலைட்டுகளை நிரப்ப உதவுகின்றன. சாலட்கள், ஸ்மூத்திகளில் கலந்து, எலுமிச்சை இஞ்சியுடன் சேர்த்து வெள்ளரி ஜூஸாகவும் பருகலாம்.
தயிர்:
மோராகக் கடைந்து பருக செரிமானத்தை தூண்டும். வயிற்றுக்கு இதம் தரும், உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். மசாலா மோர், லஸ்ஸி என செய்து சுவைக்கலாம். குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் புரோபயாடிக்குகளால் நிரம்பியது.
முலாம்பழம் மற்றும் தர்பூசணி:
தர்பூசணி 92 சதவிகிதம் நீர் நிரம்பியது. விட்டமின்கள் ஏ மற்றும் சி கொண்ட தர்பூசணி உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும். கஸ்தூரி முலாம் பழமும் உடலை குளிர்விக்க பயன்படும். இதில் மக்னீசியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. இவற்றை பழ சாலட்களாக செய்து சாப்பிடலாம். ஜூஸ், ஸ்மூத்திகளில் கலந்தும் சாப்பிடலாம்.
வெண்ணெய் பழம்:
அவகோடா பழங்களில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளது. இவை உடலில் இருந்து வெப்பத்தையும், நச்சுக்களையும் போக்க உதவும். உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும். சாலட்கள், ஸ்மூத்திகள் செய்து சாப்பிடலாம்.
சீசனல் பழங்கள்:
கோடைக்கால சீசனல் பழங்களான நுங்கு, தர்பூசணி, கிர்ணி, வெள்ளரி பழங்களை எடுத்துக்கொள்ளலாம். பழங்களை அப்படியே நறுக்கி அல்லது சாலட் செய்து சாப்பிடலாம். ஜூஸ் போடுவது என்றால் சர்க்கரைக்கு பதில் தேன் அல்லது நாட்டு சர்க்கரை கலந்து பருகுவது நல்லது.
சீசனல் காய்கறிகள்:
நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளான சுரைக்காய், சௌசௌ, பூசணிக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றை சாப்பிட வெயிலால் ஏற்படும் நோய்கள் நம்மை எளிதில் தாக்காது. பூசணிக்காய், சௌசௌ போன்ற காய்களை கோல்ட் சூப்(Cold Soup) செய்து சாப்பிட அருமையாக இருக்கும்.
புதினா:
இதில் உள்ள மெந்தால் சத்து உடலுக்கு குளிர்ச்சியைத்தரும். தேநீர், சாலட்கள், ஸ்மூத்திகளில் இவற்றை சேர்த்து சாப்பிட புத்துணர்ச்சி கூடும்.
கற்றாழை:
கற்றாழை குளிர்ச்சி மற்றும் நீரேற்றம் தரும் பண்புகளைக் கொண்டுள்ளது. இவற்றை சாலடுகள், ஸ்மூத்திகள், பழச்சாறுகளில் கலந்து எடுத்துக்கொள்ளலாம்.
பெர்ரி:
பெர்ரி பழங்கள் அதிக நார்ச்சத்தும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளும் நிறைந்தவை. இவை உடல் வெப்பத்தை குறைக்க உதவும். அப்படியே சாப்பிடலாம் அல்லது சாலட்கள், ஸ்மூத்திகளில் சேர்த்து உண்ணலாம்.
இளநீர்:
தேங்காய் தண்ணீரில் எலெக்ட்ரோலைட்டுகள் நிறைந்துள்ளன. உடலுக்கு நீரேற்றம் தரக்கூடிய இதனை வெயில் காலங்களில் எடுத்துக்கொள்ளும் பொழுது உடலின் திரவ சமநிலையை பராமரிக்க உதவும்.
குல்கந்து:
ஒரு ஸ்பூன் குல்கந்தை தண்ணீர் அல்லது பாலுடன் கலந்து பருக உடல் குளிர்ச்சி அடையும். உடல் சூடு மற்றும் நீரிழப்பு பிரச்னையை சரி செய்யும்.
பார்லி தண்ணீர்:
இது ஒரு சத்தான பானமாகும். கோடைக்காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவும். பார்லியை ரெண்டு கப் தண்ணீர்விட்டு வேகவைத்து வடிகட்டி அந்த நீரில் சிறிது தேன் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து பருக சிறந்த புத்துணர்ச்சி ஊட்டும் பானமாக அமையும்.