
தற்போது நீரிழிவு பாதிப்பு என்பது பலருக்கும் முக்கியமான பிரச்னையாக உள்ளது. நீரிழிவு குறித்த அச்சத்தில் மக்கள் பாரம்பரிய உணவுகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். அவற்றில் பழங்காலம் முதல் பயன்படுத்தி வரும் பாரம்பரிய உணவுகளில் ஒன்றுதான் கம்பு.
கம்பில் பல்வேறு விட்டமின்கள் நிறைந்துள்ளதை அறிவோம். மேலும் கம்பில் உள்ள குறைந்த கிளைசெமிக் குறியீடு, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு சிறந்த உணவாகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருப்பதோடு இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி பசியைக் கட்டுப்படுத்தி வயிறு நிறைந்திருக்கும் உணர்வைத் தருகிறது. ஆகவே கம்பினால் செய்யப்படும் இனிப்பு வகைகளையும் அச்சமின்றி சாப்பிடலாம் என்கின்றனர்.
இதோ அனைவரும் சாப்பிட ஏற்ற எளிதான முறையில் செய்யப்படும் கம்பு வடையும் உருண்டையும்.
கம்பு வடை
தேவை:
கம்பு மாவு - 1 கப்
பொட்டுக்கடலை மாவு - 1/2 கப் பெரியவெங்காயம் - 2
இஞ்சி - சிறிது
பூண்டு - 6 பற்கள்
பச்சை மிளகாய் - 4
சோம்பு - 1/4 டீஸ்பூன்
பட்டை , லவங்கம்- தலா 3
பொதினா- சிறிது
கொத்தமல்லி - சிறிது
நெய் - 2 டீஸ்பூன்
எண்ணெய்- பொரிப்பதற்கு ஏற்ப
உப்பு –தேவைக்கு
செய்முறை:
வெறும் வாணலியை அடுப்பில் மிதமான தீயில் வைத்து கம்பு மாவை நன்கு வறுத்து ஒரு அகன்ற பாத்திரத்தில் ஆறவிடவும். அதனுடன் நைசாக அரைத்த பொட்டுக் கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், அரைத்த இஞ்சி பூண்டு பட்டை சோம்பு விழுது, தேவையான உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய புதினா கொத்தமல்லி, உருக்கிய நெய் ஒரு டீஸ்பூன் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறு சிறு வடைகளாக தட்டி போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும் . உடனடியாகயும் எளிதாகவும் செய்யக்கூடிய வடை இது என்றாலும் குழந்தைகள் முதல் பெரியவர்களை அனைவருக்கும் ஏற்ற சத்துள்ளதாகும். சூடாக தேங்காய் சட்னி வைத்து சாப்பிட ருசி சூப்பராக இருக்கும். தேவைப்பட்டால் இதில் மெலிதாக நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் சேர்க்கலாம்.
கம்பு பேரிச்சை நட்ஸ் உருண்டை
தேவை:
உடைத்த கம்பு ரவை - 1 கப்
பாதாம்
முந்திரி
பேரிச்சை பழம்
பிஸ்தா பருப்பு - தலா 10
உலர் திராட்சை - 15
நெய் - 2 டேபிள் ஸ்பூன் தேங்காய்த் துருவல் - 3 ஸ்பூன்
வெல்லம் அல்லது கருப்பட்டி - 1/4 கப்
செய்முறை:
அடிகனமான வாணலியில் நெய் ஊற்றி சூடாக்கி உடைத்த கம்பு ரவையை அதில் போட்டு வாசனை வரும்வரை வறுக்கவும். தேங்காய்த்துருவலையும் வாசமாக வறுத்துக்கொள்ளவும். பிஸ்தா பாதாம் முந்திரி நறுக்கிய பேரிச்சம்பழத் துண்டுகள், தேங்காய்த் துருவல், பொடித்த வெல்லம் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றவும். பிறகு உருக்கிய நெய்யைச் சேர்த்து உருண்டைகளாக பிடிக்கவும். வயிறு நிறைக்கும் இரும்புச்சத்து நிறைந்த சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்ற இனிப்பு உருண்டை தயார். ஏலக்காய் தேவைப்பட்டால் சேர்க்கலாம்.