வாழைப்பழம் பயன்படுத்தி செய்யப்படும் உணவுகள் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒன்றாகும். அதுவும் வாழைப்பழம் பயன்படுத்தி பிரட் செய்து கொடுத்தால் ருசித்து ருசித்து சாப்பிடுவார்கள். பொதுவாகவே பிரட் என்றாலே அதில் முட்டை சேர்ப்பார்கள். முட்டை சேர்க்காமல் பிரட் செய்வது மிகவும் சவாலானது. ஏனெனில் ரொட்டியின் மிருதுவான அமைப்பை முட்டை இருந்தால்தான் கொண்டு வர முடியும். ஆனால் இந்த பதிவில் முட்டை சேர்க்காமல் வாழைப்பழம் சேர்த்து பிரட் எப்படி செய்யலாம் எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வாழைப்பழம் - 4
ஆர்கானிக் கோதுமை மாவு - 1½ கப்
சர்க்கரை - தேவையான அளவு
எண்ணெய் - ½ கப்
வெண்ணிலா எசன்ஸ் - 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் வாழைப்பழத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்பு ஒரு மேஷர் வைத்து வாழைப்பழங்களை மென்மையாக நசுக்கி கொள்ளுங்கள். மேஷர் இல்லாதவர்கள் கையிலே பிசைந்து கொள்ளலாம்.
அடுத்ததாக மசித்த வாழைப்பழக் கலவையில் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். இதில் வாசனை அதிகம் வராத எண்ணெய் சேர்க்க வேண்டும். ஏனெனில் எண்ணையின் வாசனை, ரொட்டியை மோசமாகிவிடும். சூரியகாந்தி எண்ணெய் பயன்படுத்துவது நல்லது. பின்னர் ஒரு டீஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ் சேர்ந்து கலக்கி ஓரமாக வைத்து விடுங்கள்.
கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து சலித்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மாவை வாழைப்பழக் கலவையில் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
இதை ஒரு வட்டமான பாத்திரத்தில் வெண்ணெய் தடவி ஊற்றிக் கொள்ளுங்கள். இதை அப்படியே எடுத்து மைக்ரோவேவ் அவனில் 180 டிகிரி செல்சியஸில் 30 நிமிடங்கள் வேகவிட்டால், சூடான சுவையான முட்டையில்லா வாழைப்பழ கேக் தயார்.