
ஈவினிங் ஸ்நாக்ஸ் என்றாலே பஜ்ஜி, பக்கோடாக்கு தான் முதலிடம். காபி, டீயுடன் பொருத்தமான ஸ்நாக்ஸ் இது. செய்து சுவைப்போமா.
1) கோலி பஜ்ஜி:
ரவை 1 கப்
கடலை மாவு 1/2 கப்
தயிர் 1/4 கப்
பச்சை மிளகாய் 2
இஞ்சித் துருவல் 1 ஸ்பூன்
சர்க்கரை 1 ஸ்பூன்
சமையல் சோடா 1/4 ஸ்பூன்
உப்பு தேவையானது
கறிவேப்பிலை சிறிது
எண்ணெய் பொரிக்க
ரவையை நன்கு வறுத்து ஆற விடவும். அத்துடன் கடலை மாவு, உப்பு, தயிர், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், சர்க்கரை, தேவையான அளவு கறிவேப்பிலையை கிள்ளிப்போட்டு சமையல் சோடா 1/4 ஸ்பூன் கலந்து தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து 15 நிமிடங்கள் ஊற விடவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கைகளினால் உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.
பத்தே நிமிடங்களில் மிகவும் ருசியான மாலை டிபன் கோலி பஜ்ஜி தயார்.
2) புடலங்காய் பஜ்ஜி:
புடலங்காய் சிறியது 1
கடலை மாவு 1/2 கப்
அரிசி மாவு 1/4 கப்
சமையல் சோடா சிறிது
கார பொடி 1 ஸ்பூன்
ஓமம் 1/2 ஸ்பூன்
உப்பு சிறிது
புடலங்காயை நன்கு அலம்பி வட்ட வட்டமாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, சமையல் சோடா, காரப்பொடி, ஓமத்தை கையால் கசக்கி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு எண்ணெய் நன்கு காய்ந்ததும் நறுக்கிய புடலங்காயை மாவில் தோய்த்து காயும் எண்ணெயில் போட்டு இருபுறமும் நன்கு சிவக்க எடுக்கவும். வித்தியாசமான அதே சமயம் மிகவும் ருசியான புடலங்காய் பஜ்ஜி தயார்.
3) கத்திரிக்காய் மசாலா பஜ்ஜி:
கத்திரிக்காய் 2
கடலை மாவு 1/2 கப்
அரிசி மாவு 1/4 கப்
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன் காரப்பொடி 1 ஸ்பூன்
சமையல் சோடா சிறிது
உப்பு தேவையானது
எண்ணெய் பொரிக்க
கத்திரிக்காயை மெல்லிய வட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, காரப்பொடி, உப்பு, சமையல் சோடா சிறிது ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
மெல்லிய வட்டங்களாக நறுக்கிய கத்திரிக்காய்களை கரைத்து வைத்துள்ள மாவில் தோய்த்தெடுத்து ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். மிகவும் சுவையான கத்திரிக்காய் மசாலா பஜ்ஜி தயார்.