
இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்று ஜெய்சால்மர். இது ராஜஸ்தானில் உள்ளது
ஜெய்சால்மர் விமானம், ரயில் மற்றும் சாலை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள நகரம் ஜோத்பூர். ஹைதராபாத்தில் இருந்து ஜெய்ப்பூர் வழியாக ஜெய்சால்மருக்கு விமானத்தில் சென்றோம். ஜோத்பூரிலிருந்து சாலை வழியாகவும் ஜெய்சால்மருக்கு பயணிக்கலாம்.ஜெய்சால்மர் விமான நிலையம், உள்நாட்டு விமானச் செயல்பாட்டிற்காக மட்டுமே உள்ள மிக சிறிய விமான நிலையம்.
விமான நிலையத்திலிருந்து நாங்கள் புக் செய்த ஹோட்டலை அடைந்தோம். ஹோட்டலே ஒரு பண்டைய கால அரண்மனைபோல இருந்தது. முதலில் நாங்கள் எங்கள் ஹோட்டலில் இருந்து 42 கி.மீ தூரத்தில் உள்ள சாம் சாண்ட் டியூன்ஸ் (Sam sand dunes) பார்க்கப் புறப்பட்டோம்.
மணல் குன்றுகள் ஒரு பெரிய பரப்பளவில் பரந்து விரிந்து பெரிய கடல்போல் தோற்றமளிக்கின்றன. குன்றுகளுக்கு மத்தியில் அற்புதமான ஒட்டக சவாரி சூப்பர். இங்கிருந்து சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பது ஒரு மறக்க முடியாத அனுபவமாகும். ஒட்டக சவாரிக்கு பதிலாக ஜீப்பிலும் போகலாம். புகழ்பெற்ற பாலைவனத் திருவிழாவின்போது இந்த கண்கவர் மணல் குன்றுகளில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
இரவு நேரத்தில் ஒரு திறந்த வெளியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் ஏற்பாடு செய்த அழகான ராஜஸ்தானி நடன நிகழ்ச்சியை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பாரம்பரிய இசைக்கருவியில் இசைக்கப்படும் பாடல்களுக்கு வண்ணமயமான உடைகள் அணிந்து நடனமாடும் கலைஞர்களின் திறமை வியக்க வைக்கிறது.
அடுத்த நாள் காலை 16 கி.மீ தொலைவில் உள்ள லோதுர்வாவுக்கு (Lodurva) புறப்பட்டோம். பட்டி ஆட்சியாளர்களின் இந்த பண்டைய தலைநகரம், இந்த நகரத்தை நிறுவிய லோத்ரா ராஜபுத்திரர்களின் பெயரால் பெயரிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது ஒரு முக்கியமான ஜெயின் யாத்ரீக மையமாகவும் உள்ளது. அற்புதமான சமண ஆலயங்களை இங்கு காணலாம். பிரதான ஆலயத்தில் 23வது தீர்த்தங்கரரான பரஷ்வநாதரின் வெள்ளிச்சிலை உள்ளது.
சோனார் கில்லா (Sonar killa) கோட்டைக்கு சென்று எங்கள் சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்தோம். இது 76 மீட்டர் உயரமுள்ள திரிகுடா மலையின் உச்சியில் அமைந்துள்ள பண்டைய கோட்டையாகும். 1156 ஆம் ஆண்டில் ராவல் ஜெய்சால் என்பவரால் கட்டப்பட்டது.
இது ராஜஸ்தானின் இரண்டாவது பழமையான கோட்டையாகும். இந்த கோட்டையின் வாயில் கணேஷ் வாயில் என்று அழைக்கப் படுகிறது பதினைந்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய சமண கோயில்களை இங்கு காணலாம். ரிஷப்தேவ்ஜி கோயில் நகரத்தின் மிகச்சிறந்த கோயில்களில் ஒன்றாகும். சமண தீர்த்தங்கரர்களின் உருவங்களையும், நடுவில் ரிஷப்தேவ்ஜியின் உருவ சிலையையும் காணலாம். ஸ்ரீ சாம்பவநாதர் கோயில், ஸ்ரீ அஷ்டபதி கோயில் போன்ற பிற கோயில்களும் உள்ளன.
கோட்டைக்கு சென்ற பிறகு, வளமான கலாச்சார பாரம்பரியத்தின் நேர்த்தியாக செதுக்கப்பட்ட ஹவேலிகளைக் காணலாம். பட்வோன் கி ஹவேலி ஜெய்சால்மரின் மிகப்பெரிய மற்றும் மிக விரிவான ஹவேலி. ராஜபுதன கட்டிடக்கலைக்கு ஒரு உன்னதமான எடுத்துக்காட்டு ஆகும்.
பாதல் விலாஸ் அரண்மனை அரச குடும்பத்தின் தற்போதைய வீடாகும். தாஜியா கோபுரம் என்று அழைக்கப்படும் ஒரு அரண்மனை ஒரு கட்டிடக்கலை அதிசயம். இது நகரத்தின் அடையாளமாகும்.
காட்சிசா ஏரி, அமர் சாகர் மற்றும் மூல் சாகர் போன்ற சில ஏரிகளைப் பார்க்கச் சென்றோம். இது உண்மையிலேயே பாலைவனத்தில் ஒரு சோலை. உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே ஒரு பிரபலமான பிக்னிக் இடமாகும்.
- ரத்னா ராதாகிருஷ்ணன்
பின்குறிப்பு:-
இக்கட்டுரை இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக்கொள்வது நல்லதுதானே தோழிகளே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்