
பட்சணங்கள் செய்ய வாணலியில் எண்ணெய் விட்டு வைத்ததும் பொங்கி வருகிறதா? அதை தவிர்க்க இரண்டு மூன்று கொய்யா இலைகளை எண்ணெயில் போட்டு விடுங்கள் பிறகு எண்ணெய் பொங்காது.
பட்சணங்கள் நிறைய செய்யும்போது செய்பவர்களுக்கு தலைவலி வராமல் இருக்க இஞ்சியை தோல் நோக்கி சிறு துண்டு செய்து எண்ணெயில் போட்டுவிட்டால் போதும் எண்ணெய் புகையால் தலைவலி வராது.
எண்ணெய் பட்சணங்கள் எது செய்வதாக இருந்தாலும் மாவில் சிறிது எண்ணெய் ஊற்றி பிசைந்து பிறகு செய்தால் எண்ணெய் அதிகம் குடிக்காது.
சீடை முறுக்கு தட்டை போன்றவற்றை செய்யும் முன்பு மாவை வெறும் வானலியில் வறுத்துவிட்டு பிறகு செய்தால் பட்சணங்கள் மொறுமொறுவென இருக்கும்.
தேன்குழல் செய்யும்போது உருளைக்கிழங்கை வேகவைத்து சேர்த்தால் சுவையும் கூடுதலாக இருக்கும்.
சீடை முறுக்கு தட்டை எதுவானாலும் மாவை பிசையும்போது ஒரு கரண்டி தேங்காய் எண்ணெயை விட்டு பிசைந்து செய்தால் தேங்காய் எண்ணெயில் செய்தது போலவே எந்த எண்ணெயில் செய்தாலும் மணக்கும்.
சீடை செய்யும் மாவில் உப்பை கரைத்து சேர்த்து பிசைந்து செய்தால் சீடை வெடிக்காது.
சீடை செய்யும் முன் எண்ணெய் மிக கூடுதலாக காயாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் சீடையை எண்ணெயில் இருந்து எடுக்கும் பொழுது அதை கண்கரண்டியில் எடுத்து கண் துளை உள்ள ஒரு தட்டில் போட்டு எண்ணெயை வடித்து விடவேண்டும்.
முள்ளுமுறுக்குச் செய்யும்போது கடலைமாவை குறைத்து பொட்டுக்கடலை மாவை சேர்த்தால் முள்ளு முறுக்கு கூடுதல் மொறுப்புடன்புடன் இருக்கும்.
பச்சரிசியை ஊறவைத்து நீரை வடித்துவிட்டு மாவாக்கி வறுத்து விட்டு சீடை செய்தால் சீடை வெடிக்காது.
சீடைமாவை உருட்டி விட்டு அதில் ஊசியால் சிறு துளையிட்டு விட்டு பிறகு எண்ணெயில் போட்டால் சீடை நன்றாக வெந்திருக்கும் மாவு வேகாமல் சதசதவென இருக்காது.
முள்ளு முறுக்கு செய்யும்போது மிளகை பொடித்து சேர்த்தல் மணமாக இருக்கும் ஜீரணமும் ஆகும்.
ஒரு தாம்பாளத்தில் வெண்ணெய் தூள் செய்த உப்பு இரண்டையும் போட்டு நன்றாக குழைத்து விட்டு முறுக்கு மாவில் சேர்த்து பிசைந்தால் மாவு நல்ல பதமாக இருக்கும்.
ரிப்பன் பக்கோடா செய்யும்போது அரிசி மாவு கடலை மாவுடன் இரண்டு டீஸ்பூன் உளுந்து மாவையும் சேர்த்துக்கொண்டால் எண்ணெய் அதிகம் குடிக்காது கரகரப்பாவும் இருக்கும்.
தட்டை செய்யும் பொழுது தட்டையை தட்டிவிட்டு அதில் சிறு சிறு துளையிட்டுவிட்டால் தட்டை நன்றாக மொறு மொறு என வெந்து விடும்.
சீடை முறுக்கு செய்யும்போது மாவில் சிறிதளவு தேங்காய் பால் கலந்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
அப்பம் செய்யும்போது நேராக வராமல் கை கால் முளைத்தது போல் பிரிந்து வராமல் இருக்க வேண்டுமானால் கொஞ்சம் வெந்நீரில் வெல்லத்தை கரைத்து மாவில் சேர்க்க வேண்டும்.
ரவா கேசரி செய்து இறக்கும்போது இரண்டு ஸ்பூன் கடலைமாவை நெய்யில் வறுத்து போட்டு கலந்தால் சுவை சூப்பராக இருக்கும்..
தேங்காய் திரட்டிப் பால் செய்வதாக இருந்தால் தேங்காயை ஓடு இல்லாமல் துருவி வெல்லத்தில் மணலை வடிகட்டி பிறகு பாகு செய்து தேங்காய் துருவலை சேர்த்து சிறிதளவு நெய்யும் விட்டு நன்றாக கிளறினால் தேங்காய் திரட்டிப் பால் இரண்டு நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும்.
அவல் கேசரி செய்யும்போது அவலை ஒருமணிநேரம் சிறிது தண்ணீர் விட்டு ஊறவைத்து செய்தால் வெல்லப்பாகில் சேர்த்து கிளறும்போது அல்வா போல இருக்கும்.