
நாவல் பழத்தில்; வைட்டமின்கள், மெக்னீசியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளடங்கி உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், இரும்புச்சத்தை கூட்டவும், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. நம் உடலுக்கு பல நன்மைகளை தருகின்ற நாவல் பழங்களை வைத்து வீட்டிலேயே காரசாரமான சட்னியும், இனிப்பான ஜாமும் எப்படி தயாரிப்பது என்று இந்த பதிவில் பார்ப்போம்.
நாவல் பழ சட்னி
தேவையான பொருள்கள்:
சின்ன வெங்காயம்:6-8,
பூண்டு: 3-5,
காய்ந்த மிளகாய்-4(தேவைக்கேற்ப),
கொட்டை நீக்கிய புளி: சின்ன நெல்லிக்காய் அளவு,
கொட்டை நீக்கிய நாவல் பழங்கள்-25-30,
பெருங்காயத்தூள்,
தேவைக்கேற்ப உப்பு.
செய்முறை:
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும்; பூண்டு பொடிப்பொடியாக நறுக்கி வைத்த சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் இந்த மூன்றையும் நன்கு வதக்கவும். அதில் புளியை சேர்க்கவும். பிறகு தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். பின் ஒரு மிக்ஸி ஜார் எடுத்துக் கொண்டு கொட்டைகள் நீக்கிய நாவல் பழத்தை போட்டு அதில் நாம் முன்பே வதக்கி வைத்ததையும் நாவல் பழங்களோடு ஒன்றாக சேர்த்து நன்கு அரைக்கவும்.
பிறகு அதில் ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்க்கவும். சட்டினியை வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றி. கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை போட்ட தாளிப்பை சட்டினியில் ஊற்றியப் பின் இப்போது, நமக்கு சுவையான நாவிற்கினிய நாவல் பழ சட்டினி ரெடி ஆனது. இந்த சட்டினியை இட்லி, தோசைக்கு வைத்து சாப்பிட்டால் டாப் டக்கராக இருக்கும்.
நாவல் பழ ஜாம்
தேவையான பொருள்கள்:
நாவல் பழம் அரை கிலோ
ஒரு கப் சர்க்கரை (தேவைக்கேற்ப)
ஒரு ஸ்பூன் லெமன் ஜூஸ்
செய்முறை:
நாவல் பழங்களில் உள்ள கொட்டைகளை எடுத்துவிட்டு ஒரு மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும். பிறகு அடுப்பில் கடாயை வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் அரைத்த நாவல் பழம் ஜூசுக்கு இணையாக அல்லது முக்கால் அளவிற்கு சீனியை போட்டு பாகு பதத்திற்கு கிளறவும். பின்பு அரைத்த ஜூசை ஊற்றி அடிப்பிடிக்காதவாறு கிளற வேண்டும். அப்போது ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். ஜாம் பதத்திற்கு வந்ததும் அடுப்பை ஆப் செய்யவும். இப்போது சுவையான இனிப்பான ஜாம் ரெடி. இதனை பிரட், சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடலாம்.
இங்க பாருங்க மக்களே இந்த ரெண்டு உணவையும் மறக்காம ட்ரை பண்ணிடுங்க..! ஏன்னா நாவப்பழ சீசன்லதான் இதெல்லாம் பண்ண முடியும் பாத்துக்கோங்க.. இந்த சீசன தவிர விட்டுறாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க..!