
தேவையான பொருட்கள்;
மைதா _ ½ கிலோ
உப்பு _ 1 ஸ்பூன்
சர்க்கரை _ 1 ஸ்பூன்
தேவையான அளவு எண்ணெய்
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, சர்க்கரை, உப்பு சேர்த்து நன்றாக கலந்த பின் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்றாக மிருதுவாக பிசைந்து கொள்ளவும். அதன் மேல் எண்ணைய் தடவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். ஒரு மணி நேரம் நன்றாக ஊறிய பிறகு அதை சிறு சிறு உருண்டைகளாக பிரித்து உருட்டி எடுத்து அதை மீண்டும் ஒரு மணிநேரம் ஈரத்துணியால் மூடி ஊறவைக்கவும்.
ஒரு மணி நேரம் கழித்து அதை நன்றாக மெல்லியதாக தேய்த்து அதை கத்தியால் நீள நீளமாக வெட்டவும். அதன் பிறகு அதன் மேலே நன்றாக எண்ணெய் தேய்த்து அதன் மேல் சிறிது மைதா மாவை தூவி அதை ஒன்றாக சேர்த்து உருட்டி வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் உருட்டி வைத்துள்ள புரோட்டாவை கையால் லேசாக தட்டி தோசை கல்லில் இருபுறமும் நன்றாக வேகவிட்டு எடுக்கவும்..
தேவைப்பட்டால் மாவு பிசையும்போது ஒரு முட்டை சேர்த்துக்கொள்ளலாம் அது இன்னும் மிருதுவாக இருக்கும். இப்போது சூடான சுவையான நூல் பரோட்டா தயார்.
பரோட்டா கடை சைவ சால்னா
தேவையான பொருட்கள்;
நல்லெண்ணெய் _100 மில்லி
புதினா _ சிறிதளவு
கருவேப்பிலை _1 கைப்பிடி
மல்லித்தழை _ சிறிதளவு
பச்சை மிளகாய் _4
தக்காளி _ 3 (நறுக்கியது)
வெங்காயம் _3 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது _2 ஸ்பூன்
தேங்காய் துருவல் _2 கப்
மல்லித் தூள் _1 ஸ்பூன்
பொட்டுக்கடலை _25 கிராம்
நிலக்கடலை(வறுத்தது)_25 கிராம்
மஞ்சள்தூள் _ ½ ஸ்பூன்
மிளகாய்தூள் _1 ஸ்பூன்
உப்பு _ தேவைக்கு
சிக்கன் மசாலா 11/2 ஸ்பூன்
ஏலக்காய் _3
பட்டை _1
சோம்பு _3 ஸ்பூன்
கிராம்பு _3
செய்முறை:
முதலில் மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, வேர்க்கடலை, பச்சை மிளகாய், 11/2 ஸ்பூன் சோம்பு, ஆகியவற்றை சேர்த்து நன்கு நைசாக இல்லாமல், சிறிது கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கிராம்பு, பட்டை, ஏலக்காய், ½ ஸ்பூன் சோம்பு ஆகியவற்றை போட்டு பொரிந்ததும் வெங்காயத்தை போட்டு brown கலர் வரும் வரை நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கி பின் மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், சிக்கன் மசாலா, மல்லித்தூள், உப்பு, கருவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து வதக்கி பிறகு தக்காளி, மல்லிக் கீரை, சேர்த்து கலந்து வதங்கியதும் 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.
கொதித்து வரும் வேளையில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கலந்து கொதித்ததும், சால்னாவில் நுரை வரும் நேரத்தில் தீயை குறைத்து கொதிக்க வைத்து இறங்கவும். கறிக்குழம்பு சுவையில் அருமையான பரோட்டா சைவ குழம்பு தயார்.