

நிறைய பேர் புலம்புவது எப்படி செய்தாலும் பொங்கல் ஹோட்டல் சுவையிலும் அதன் இளகிய பதமும் வருவதில்லை என்பதுதான்.
அதன் சீக்ரெட் ஸ் இதோ...
பொங்கலில் தண்ணீர் 1:4 என்ற விகிதத்தில் இருந்தால் குழைவாக இருக்கும்.
பொங்கல் கொதிக்க ஆரம்பித்ததும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்தால் மணமாக இருக்கும்.
இறக்கிவைத்த பிறகு நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு சேர்க்கும் போது, அதனுடன் சிறிது ஆயிலையும் சூடாக்கி கலந்துகொள்ளலாம்.
நெய்யும் பாசிப்பருப்பும் இறுகும் தன்மை கொண்டவை; எனவே தேவையான அளவில் (1:4 அளவு) நெய் சேர்த்து கிளறிவிட்டால் ஹோட்டல் பொங்கல் போல குழைவாக இருக்கும்.
பொங்கலை அரைபதம் வேகும்வரை வைத்து, பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 5 அல்லது 6 விசில் வந்த பிறகு இறக்கி, நன்கு கரண்டியால் கிளறினால் குழைவாக இருக்கும்.
சிறுதானிய பொங்கலுக்கு, சிறுதானியத்துடன் ஒரு பங்கு அரிசி சேர்த்து செய்தால் ருசி கூடும்.
பச்சரிசி விரும்பாதவர்கள் சாப்பாட்டு அரிசியை நன்கு ஊறவைத்து, பின் பாசிப்பருப்புடன் பொங்கல் தயாரிக்கலாம்.
சீரகம், மிளகு ஆகியவற்றை லேசாக நெய்யில் அல்லது ஆயிலில் வறுத்துப் பொடித்து சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும்.
தாளிப்பதற்கு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, இஞ்சி, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, பாசிப்பருப்பு அரைபதம் வெந்ததும் அரிசியைச் சேர்த்தால் பொங்கல் நன்றாக குழையும்.
பொடியாக நறுக்கிய இஞ்சி விரும்பாதவர்கள் இஞ்சி விழுதைச் சேர்த்துக் கொள்ளலாம்.
அதிக காரம் விரும்புபவர்கள் நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்துக்கொள்ளலாம்.
குக்கரில் பொங்கல் பாதி அளவு மட்டுமே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்; அப்போதுதான் நன்கு குழையக் கிளற முடியும்.
பொங்கல் இறக்கிவைத்த பிறகு, கறிவேப்பிலையை நெய் அல்லது ஆயிலில் பொரித்துச் சேர்த்தால் மணம் அதிகரிக்கும்.
பொங்கல் இறக்கி வைக்கும்போது கரண்டியில் அள்ளும் பக்குவத்தில் (மாற்றி ஊற்றும் பதத்தில்) இருந்தால், பரிமாறும்போது இறுகாமல் குழைவாக இருக்கும்.
பொங்கலுக்கு ஒரு அளவு பால் சேர்த்து செய்தால் சுவை மிகும்.