

சிவப்பு அவல் பொங்கல்
தேவை:
சிவப்பு அவல் – 1 கப்
வெல்லம் – 3/4 கப்
நெய் – 3 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
முந்திரி, திராட்சை – தேவையான அளவு
தண்ணீர் – 1 1/2 கப்
செய்முறை:
சிவப்பு அவலை தண்ணீரில் கழுவி வடிகட்டவும். தண்ணீரைக் காய்ச்சி அவலை சேர்த்து மெலிதாக வேகவைக்கவும்.
வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி, பாகு நிலைக்கு வரும் வரை காய்ச்சவும். பாகுவில் வேகவைத்த அவலை சேர்த்து கலக்கவும். நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து சேர்த்து, ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும். சூப்பர் சுவையில் சிவப்பு அவல் பொங்கல் ரெடி.
ஜவ்வரிசி பொங்கல்
தேவை:
ஜவ்வரிசி - 300 கிராம்
வெல்லம் - 200 கிராம்
பசும் பால் 200 - மில்லி
நெய் - 50 கிராம்
முந்திரி - 10
காய்ந்த திராட்சை - 5
ஏலக்காய் - 5
செய்முறை;
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு ஜவ்வரிசையைப் போடவும். ஜவ்வரிசி நன்றாக வெந்ததும், ஏலக்காய் வெல்லம் நன்கு தட்டி அதில் போடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து நன்கு கிளறவும்.
ஜவ்வரிசி கெட்டிப் பதத்திற்கு வந்ததும் பால் மற்றும் நெய் சேர்க்கவும். ஒரு கடாயில் தேவையான அளவு நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை வதக்கி ஜவ்வரிசியில் போடவும். கம கமக்கும் ஜவ்வரிசி பொங்கல் தயார்.
தேங்காய்ப் பால் பொங்கல்
தேவை:
பச்சரிசி - ஒரு கப்
பாசிப் பருப்பு - கால் கப்
நெய் - 2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 15
தூளாக்கிய வெல்லம் - ஒரு கப்
ஏலக்காய் - 5
தேங்காய்ப்பால் - 1 கப்
செய்முறை;
வெறும் வாணலியில் பாசிப்பருப்பினை லேசாக சிவக்கும் வண்ணம் வறுத்துக்கொள்ளவும் பின்னர் ஒரு பாத்திரத்தில் - 5 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், பாசிப் பருப்பினை முதலில் போடவும். பருப்பு முக்கால் பதம் வெந்தவுடன் அரிசியைக் நன்றாகக்கழுவி, களைந்து போடவேண்டும்
அரிசியும், பருப்பும் நன்கு வெந்து குழைந்த பின், தூள் செய்த வெல்லத்தினைப் போடவும். தீயை சற்றுக் குறைத்து, வெல்லம் கரைந்து நன்கு சேரும் வரை கிளறி, பாதி நெய்யினை ஊற்றி மீண்டும் கிளறிவிட்டு இறக்கி வைக்கவும். மீதி உள்ள நெய்யை ஒரு வாணலியில் ஊற்றி முந்திரியைப் போட்டு சிவப்பாக வறுத்து பொங்கலில் போடவும். ஏலக்காயையும் பொடித்துப் போட்டுக் கொள்ளவும். பின் தேங்காய்ப்பால் விட்டு சிறிது நேரம் கிளறவும். தேங்காய் பால் பொங்கல் ரெடி. இதன் சுவை அல்டிமேட்டாக இருக்கும்.
பேரீட்சை பொங்கல்
தேவை:
பச்சரிசி - ஒரு கப், பாசிப்பருப்பு - முக்கால் கப், வெல்லக்கட்டி - இரண்டு, பேரீட்சை - ஆறு,
தேங்காய் - நான்கு கீற்றுகள், ஏலக்காய் - மூன்று,
நெய் - நான்கு ஸ்பூன்,
உப்பு - சிறிது
செய்முறை:
தேங்காயையும், பேரீட்சையையும் பொடியாக நறுக்கி வைக்கவும். தூசில்லாமல் வெல்லத்தை சூடு செய்து கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும். பருப்பையும், அரிசியையும் சேர்த்து உப்பு போட்டு குக்கரில் குழைய வேகவைத்து எடுக்கவும்.பின்னர் அதில் கரைத்த வெல்லத்தை ஊற்றி கிளறவும்.
அதன் பின் அதில் பேரீட்சையை போட்டு சிறுதீயில் அடிப்பிடித்துவிடாமல் ஏலக்காய் பொடித்து போட்டு கிளறவும். அடுத்து ஒரு வாணலியில் நெய் விட்டு, அதில் நறுக்கிய தேங்காயை போட்டு நன்கு சிவக்க வறுக்கவும். வறுத்ததை அடுப்பில் இருக்கும் பொங்கலில் கொட்டிக் கிளறவும். சுவையான பேரீட்சை பொங்கல் ரெடி.