

வேலை விட்டு வீட்டிற்கு வரும்போது யாராவது டிபன் செய்து வைத்திருக்க மாட்டார்களா என்று சலிப்பும் மலைப்பும் இருக்கும் போது, பசியுடன் காத்திருக்கும் குழந்தைகளுக்கு எளிதில் செய்து தரும் வகையில் பிரட் ரெசிபீஸ்.
பிரெட் உப்புமா
ஒரு பாக்கெட் பிரட்டை பிரித்து, ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
அதில் பிரட் துண்டுகளை நனைத்து பிழிந்து எடுத்து ஒரு தட்டில் பரப்பவும்.
அடுப்பில் மிதமான தீயில், வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உடைத்த முந்திரிப்பருப்பு, திராட்சை மற்றும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
வதங்கியதும் நனைத்த பிரட்டை சேர்த்து நன்கு கிளறி, சிறிது நேரம் அப்படியே மூடி வைக்கவும். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி வைக்கவும்.
பிரெட் சேண்ட்விச்
துருவிய கேரட், வெங்காயம், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிது கடலை மாவு மற்றும் அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். ரொட்டிகளை சிறிது நெய் விட்டு டோஸ்ட் செய்யவும்.
ஒரு ரொட்டித் துண்டின் மீது கேரட்–வெங்காயக் கலவையை வைத்து மற்றோர் ரொட்டியால் மூடிவைக்கவும்.
இதுபோல அனைத்து ரொட்டிகளையும் தயார் செய்து வைக்கவும்.
தயார் செய்த ரொட்டிகளை ஒவ்வொன்றாக எடுத்து கடலை மாவுக் கலவையில் போட்டு, பிரியாமல் எடுத்து தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
இருபுறமும் பொன்னிறமாக வரும் வரை திருப்பிப் போட்டு எடுத்து, பிரட்டை குறுக்கே இரண்டாக வெட்டி பரிமாறவும். நான்வெஜ் பிரியர்கள், இதனை கடலை மாவிற்கு பதில் முட்டை சேர்த்து செய்தால் சுவை கூடும்.
பிரட் நட்ஸ் நெஸ்ட்
பிரட்டை நன்கு கனிந்த வாழைப்பழம், மைதா மாவு சேர்த்து நன்கு கலந்து, மிதமான உருண்டைகள் பிடித்து வைக்கவும்.
மிதமான தீயில் வாணலியில் சிறிது நெய் ஊற்றி, அதில் கொஞ்சம் முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா ஆகியவற்றை பொரித்து எடுக்கவும்.
அதே வாணலியில் சிறிது நெய் ஊற்றி, பாயசத்திற்கு உபயோகிக்கும் சேமியாவை வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் சோளமாவை மிகமான பதத்தில் கரைத்துக்கொள்ளவும். மற்றொரு கிண்ணத்தில் கொஞ்சம் ரஸ்கை பொடித்து வைத்துக்கொள்ளவும்.
பிரட் உருண்டைகளை எடுத்து, சிறிது நட்ஸ் கலவையை பூரணமாக உள்ளே வைத்து நன்கு உருட்டி, சோள மாவில் தோய்த்து, பிறகு ரஸ்க் பொடி மற்றும் சேமியாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
குருவிக்கூடு போன்ற வடிவில் இருக்கும் இது சாப்பிட சுவையாக இருக்கும்.