
-கல்பனா ராஜகோபால்
பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை நட்ஸ் வகைகளை சாப்பிட வைப்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டி இருக்கிறது அதற்கு இதோ ஒர் சுலப வழி.
ஆரோக்கியம் தரும் சத்து நிறைந்து நட்ஸ் கலவைப்பொடி
முந்திரி பருப்பு 50 கிராம்
பாதாம் பருப்பு 50 கிராம்
சீயா விதைகள் 50 கிராம்
வெள்ளரி விதை 50 கிராம்
பூசணி விதை 50 கிராம்
கறுப்பு எள் 50 கிராம்
வெள்ளை எள் 50 கிராம்
பிஸ்தா பருப்பு கொட்டை நீக்கியது 50 கிராம்
கிஸ்மிஸ் 50 கிராம்
செய்முறை:
முந்திரி கிஸ்மிஸ் தவிர மற்ற அனைத்து விதைகளையும் முதல் நாள் இரவு ஊறவைக்கவும். மறுநாள் அவற்றை தண்ணீர் வடித்து ஒரு துணியின் மீது போட்டு உலர விடவும். பாதாமை தோல் நீக்கிவிடவும்.
ஈரப்பதம் காயும் வரை உலர்த்தவும். பின் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்விடாமல் அவற்றுடன் முந்திரி மற்றும் கிஸ் மிஸ் சேர்த்து ஒவ்வொன்றாகப் போட்டு தனித்தனியாக வாசம் வரும் வரை வறுத்து எடுத்துவிட்டு ஆறவிடவும். ஆறிய பின் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக பொடி செய்து வைக்கவும்.
காற்றுப் புகா ஜாரில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
பயன்படுத்தும் முறை:
1. தோசை/ சப்பாத்தியின் மேல் தூவிக் கொடுக்கலாம்
2. ஒரு ஸ்பூன் நெய் இரண்டு ஸ்பூன் கரும்புச் சர்க்கரை யுடன் இந்தப் பொடியைக் கலந்து சப்பாத்தியில் தடவி ரோல் செய்து பரிமாறலாம்
3. பழக்கலவை/ காய்கனி கலவையில் தூவி பரிமாறலாம்
4. இட்லிக்கு பொடியாகவும் தேங்காய் எண்ணெய்/நெய் கலந்து பரிமாறாலாம்
5. சிறு குழந்தைகளுக்கு நெய் சாதத்துடன் கலந்து ஊட்டலாம்
6. தயிரில் கலந்து தொட்டுக்கொள்ள கொடுக்கலாம்.
பொதுவாகவே பொரியல் கூட்டு சாப்பிடும்போது பலர் அதில் உள்ள கறிவேப்பிலையை ஒதுக்கி தள்ளி வைத்துவிட்டுதான் சாப்பிடுவர் அதை தவிர்க்க முடியும்.
கறிகாய்ப்பொடி
தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை 1 கொத்து நீரில் அலசி நிழலில் உலர்த்தியது
முந்திரி பருப்பு 10
சீரகம் 2 ஸ்பூன்
சோம்பு 1 ஸ்பூன்
வறுத்த வேர்க்கடலை 1 கைப்பிடி
பெருங்காயத்தூள் 1 ஸ்பூன்
அடுப்பில் வாணலியை வைத்து மிதமான தீயில் மேற்கண்ட அனைத்து பொருட்களையும் கறிவேப்பிலை தவிர ஒவ்வொன்றாக எடுத்து எண்ணை விடாமல் வறுத்து எடுக்கவும். இறுதியில் கறிவேப்பிலையை நிறம் மாறாமல் மொறு மொறுப்பாக வறுத்து எடுக்கவும். அவற்றை ஆறிய பின் மிக்ஸியில் போட்டு கொர கொரப்பாக அரைத்து எடுத்து காற்றுப் புகா ஜாரில் போட்டு வைத்துக் கொண்டு கூட்டு பொரியல் செய்து இறக்கி வைக்கும் முன் ஒர் ஸ்பூன் தூவினால் மணமும் சுவையும் ஆரோக்கியமும் தரும். மேலும் தேங்காய் துருவல் சேர்க்க தேவை இருக்காது.