
தயிர் கூட்டு
தேவை:
புளித்த தயிர் - ஒரு கப்
வாழைக்காய் - ஒன்று
சேனைக்கிழங்கு - கால் கிலோ
தேங்காய் துருவல் - ஒரு கப்
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
மிளகு சீரகப்பொடி- இரண்டு ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
தாளிக்க - கடுகு, வரமிளகாய் ஒன்று
செய்முறை:
இரண்டு காய்கறிகளையும் தோல் நீக்கி நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, வேகவைக்கவும். தேங்காய்த் துருவல், பச்சை மிளகாயை அரைக்கவும், வாணலியில், வெந்த காய்கறி, அரைத்த விழுது, மிளகு, சீரகப்பொடி, தயிர் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கிளறி கெட்டியானவுடன், கடுகு, வரமிளகாய், கருவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கி வைக்கவும். தொட்டுக் கொள்ளவும், சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
தயிர் சீடை
தேவை:
பச்சரிசி - 2 கப்
புளித்த கெட்டி தயிர் - 3 கப்
வெண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
வற மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி - சிறு துண்டு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை:
பச்சரிசியைக் களைந்து நீரை வடிய விட்டு, உலர்த்தி, மாவாக அரைக்கவும். உப்பு, மிளகாய், இஞ்சி, பெருங்காயம் இவற்றை நைசாக அரைத்து, மாவில் போட்டு வெண்ணெய், தயிர் கலந்து கெட்டியாக பிசையவும். பின்னர் சீடைகளாக உருட்டி 45 நிமிடங்களில் காய விடவும். ஈரப்பதம் போனதும் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கொஞ்சம் கொஞ்சமாக சீடைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான, புதுமையான தயிர் சீடை தயார்.
தயிர் பூரி
தேவை:
கடலை மாவு - 2 கப்
கெட்டித் தயிர் -அரை கப்
சீரகத்தூள் ஒரு - ஸ்பூன்
ஓமம் - ஒரு ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
பெருங்காயம் - சிறிது
செய்முறை:
கடலை மாவு, தயிர், உப்பு, ஓமம், சீரகத்தூள், பெருங்காயத்தூள் இவை அனைத்தையும் கலந்து, இளகலாகவும் இல்லாமல், கெட்டியாகவும் இல்லாமல் நன்கு பிசைந்து, பூரிகளாகத் தோய்த்து, காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான தயிர் பூரி தயார். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, தக்காளி தொக்கு பொருத்தம்.
தயிர் பர்பி
தேவை:
பசும்பால் - அரை லிட்டர் (தயிருக்காக)
சர்க்கரை - அரை கிலோ
ஏலக்காய் தூள் - ஒரு ஸ்பூன்
செய்முறை:
பசும்பாலை சுண்டக் காய்ச்சி, ஆறியதும் சிறிது தயிர் விட்டு உறை ஊற்றி தோய்க்கவும். தயிர் நன்கு உறைந்ததும் அதை சுத்தமான ஒரு வெள்ளைத் துணியில் கட்டித் தொங்கவிட்டு, அடியில் ஒரு பாத்திரம் வைக்கவும். நீர் முழுவதும் வடிந்ததும் தயிர் விழுதை எடுத்து வைக்கவும். சர்க்கரையில் தண்ணீர் விட்டு கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். அடுப்பு சிம்மில் இருக்கட்டும். பின்னர் பாகில் தயிர் விழுதைப் போட்டுக் கிளறவும். கலவை கெட்டியானதும், ஏலக்காய் தூள் தூவி, இறக்கி வைத்து, நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி, பரப்பி ஆறியதும் வில்லைகளாக போடவும். சுவையான தயிர் பர்பி தயார்.