
காரப் பயறு
தேவை:
பச்சைப் பயறு – 2 கப்,
வர மிளகாய் – 2
மிளகு, சீரகம் - தலா ஒரு ஸ்பூன்
எலுமிச்சை சாறு ட- 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை.
நெய் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
பச்சை பயறை நீரில் 2 மணிநேரம் ஊறவைக்கவும். மிளகு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை இவற்றை சிறிது நெய்விட்டு வறுத்து, பொடிக்கவும். அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு சேர்க்கவும். ஊறிய பச்சைப் பயறின் நீரை முழுவதும் வடித்துவிட்டு, ஒரு சுத்தமான துணியில் பரவலாக போட்டு உலரவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு, காய்ந்த பயறைப் போட்டு வறுத்து, தயாரித்து வைத்திருக்கும் பொடியை கலந்து, குலுக்கி வைத்தால் சுவையான, சத்தான ஸ்நாக்ஸ் தயார்.
கார முந்திரி
தேவை:
முந்திரிப் பருப்பு - 100 கிராம்,
கடலை மாவு - அரை கப்,
பச்சரிசி மாவு - 3 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
வர மிளகாய் - 3
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
புளி - கோலி குண்டு அளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை:
முந்திரிப் பருப்பை கழுவி நீரை நன்றாக வடித்து விட்டு, சிட்டிகை உப்பு பிசிறி வைக்கவும். புளி, உப்பு இவற்றை அரைத்து, அதில் கடலை மாவு, அரிசிமாவு, நெய், பெருங்காயத்தூள் கலந்து, தேவைக்கேற்ப நீர் சேர்த்து, பஜ்ஜி மாவு பதத்தில் தயாரிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, ஒவ்வொரு முந்திரிப் பருப்பையும் மாவில் தோய்த்து, வறுத்து எடுக்கவும். இது வித்தியாசமான, சுவையான, சத்தான ஸ்நாக்ஸ்.
கார சிப்ஸ்
தேவை:
கோதுமை மாவு - 2 கப்,
நெய் - 2 ஸ்பூன்
மிளகு சீரகத்தூள் - ஒரு ஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு, தேங்காய் எண்ணெய் - தேவைக்கேற்ப,
செய்முறை:
கோதுமை மாவில் நெய், உப்பு, மிளகு சீரகத்தூள், பெருங்காயத்தூள் கலந்து நீர் விட்டுப் பிசையவும். அதை அப்பளங்களாக இட்டு, விரும்பும் வடிவத்தில் கத்தியால் சிறு துண்டுகள் போடவும். வாணலியில் எண்ணெய் விட்டு, சிப்சை சிறிது சிறிதாக அள்ளிப்போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
வறுத்த கடலைப்பருப்பு
தேவை:
கடலைப்பருப்பு – 1 கப்,
பெருங்காயத்தூள்– ஒரு சிட்டிகை,
மிளகு சீரகத்தூள் – 1 ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப,
செய்முறை:
கடலைப் பருப்பை களைந்து, நீரை நன்கு வடித்துவிட்டு, ஒரு சுத்தமான வெள்ளை துணியில் பரப்பி வைக்கவும். ஈரம் போக உலர்ந்ததும், வாணலியில் எண்ணெய் விட்டு, உலர்ந்த கடலைப் பருப்பை சிறிது சிறிதாக போட்டு வறுத்து எடுக்கவும். பிறகு அதில் பொடித்த உப்பு, மிளகு சீரகத்தூள், பெருங்காயத்தூள் கலந்து குலுக்கி வைத்தால், சுவையான, மொறு மொறு நொறுக்குத் தீனி தயார்.