

சாக்லேட் பான் கேக்
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - ஒரு கப்
கோகோ பவுடர் - மூணு டேபிள் ஸ்பூன்
சர்க்கரை -ஒரு கப் (பொடித்தது)
வெண்ணிலா எசன்ஸ் -ஒரு டீஸ்பூன்
பால் -ஒன்றை கப்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் பவுடர் -ஒரு டீஸ்பூன்
பேக்கிங் சோடா - ஒரு டீஸ்பூன்
அலங்கரிக்க: சாக்லேட் சாஸ் ,முந்திரி, பாதாம் .
செய்முறை:
மைதா மாவு, கோக்கோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, முதலியவற்றை சலித்து, ஒரு பாத்திரத்தில் போட்டு காய்ச்சி ஆறிய பால், வெண்ணிலா எசன்ஸ், பொடித்த சர்க்கரையை விட்டு சேர்த்து நன்றாக கலக்கவும்.
இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். தவாவில் சிறிது நெய் தடவி ஒரு கரண்டி மாவை ஊற்றி ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும். எடுத்த பின் சாக்லேட் பான் கேக்கின் மேல் சாக்லேட் சாஸ் லேசாகத் தடவி பொடித்த நட்ஸ் தூவி அலங்கரிக்கவும். ருசியான சாக்லேட் பான் கேக் ரெடி.
ஓட்ஸ் பான்கேக்
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் -ஒன்றை கப்
மெல்லிய அவல் -அரைக்கப்
தக்காளி, பெரிய வெங்காயம் - தலா ஒன்று
கேரட் -சிறிது
அரிந்த மல்லித்தழை -மூணு டேபிள்ஸ்பூன்.
திக்கான மோர் -ஒரு கப்
எலுமிச்சை சாறு -ஒரு டேபிள் ஸ்பூன் .
சீரகம் -ஒரு டீஸ்பூன்
எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன்.
ஈனோ சால்ட் - ஒரு டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
செய்முறை:
ஓட்ஸை மிக்ஸியில் பொடிக்கவும். அவலை கொரகொரப்பாக பொடிக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் பொடித்த அவல், பொடித்த ஓட்ஸ், சில்லி பிளக்ஸ், உப்பு, மல்லித்தழை, பொடியாக அரிந்த கேரட், அரிந்த வெங்காயம், அதிந்த தக்காளி, சீரகம், மோர் சேர்த்து கலக்கவும்.
அளவாக நீர் விட்டு மாவை இட்லி மாவு பதத்துக்கு கரைத்து 20 நிமிடங்கள் வைக்கவும். சமைப்பதற்கு முன்பு அந்த மாவை எடுத்து ஈனோ சால்ட் சேர்த்து கலந்து மூன்று நிமிடங்கள் கழித்து எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை ஊற்றி ஓரங்களில் சிறிது எண்ணெய் விட்டு ஒருபுறம் வெந்ததும் திருப்பிப்போட்டு மறுபறமும் வெந்ததும் எடுத்து கார சட்னியுடன் சாப்பிடலாம் . எலுமிச்சைசாறு சிறிது மேலாக ஊற்றலாம். ருசியான ஓட்ஸ் பான்கேக் ரெடி.
ஸ்பிரிங் ஆனியன் கேக்
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு ,மைதா மாவு - தலா ஒரு கப்
பொடியாக அரிந்த வெங்காயத்தாள் - அரைக்கப்
மிளகுத்தூள் - இரண்டு டீஸ்பூன் .
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
ஓமம் -அரை டீஸ்பூன்.
உப்பு -தேவைக்கு.
செய்முறை:
கோதுமை மாவு மைதா மாவு சால்ட் போட்டு வெதுவெதுப்பான நீர் விட்டு சப்பாத்திமாவு பதத்தில் பிசைந்து 20 நிமிடங்கள் ஊற விடவும். பின் இதை கனமான சப்பாத்தி மாதிரி இட்டு அதற்கு மேலே மிளகுத்தூள், ஓமத்தூள் தூவி பாய் மாதிரி சுருட்டவும்.
சுருட்டியதை நான்கு பாகங்களாக கட் செய்யவும். ஒவ்வொன்றையும் சிறிய பூரி மாதிரி வட்டமாக இட்டு எடுக்கவும்.
தவாவில் லேசாக எண்ணெய் தடவி வட்டமாக தயாரித்த பூரி பான் கேக்கை போட்டு ஓரங்களில் லேசாக எண்ணெய் விட்டு ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும். ருசியான ஸ்பிரிங் பான் கேக் தயார். இதற்கு தக்காளி சாஸ் தொட்டு சாப்பிடலாம்.