
விநாயகர் சதுர்த்தி என்பது அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கும் ஆன்மிக பண்டிகை. இந்த நாளில் அன்னபூர்ணியின் அருளை நினைவுபடுத்தும் விதமாக சுவையான பண்டிகை உணவுகள் தயாரிக்கப் படுகின்றன. இங்கே விநாயகர் மிகவும் விரும்பும் மோதகத்தை வாழைப்பழம் சேர்த்து செய்து அசத்தலாம்.
வாழைப்பழ மோதகம்
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் _ 1
பொடித்த வெல்லம் _ 1/2 கப்
தேங்காய் துருவல் _1/2 கப்
ஏலக்காய் தூள் _1 டீஸ்பூன்
நறுக்கிய முந்திரிபருப்பு _3 டீஸ்பூன்
கோதுமை மாவு _1 கப்
பொடித்த அவல் _1கப்
நெய் _3 ஸ்பூன்
செய்முறை;
ஒரு பாத்திரத்தில் வாழைப் பழத்தை உரித்துப்போட்டு நன்கு மசித்துக் கொள்ளவும். அத்துடன் பொடித்த வெல்லத்தை சேர்த்து நன்கு கலக்கி வைத்துவிட்டு அத்துடன் தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், நறுக்கிய முந்திரி பருப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். பின்னர் இத்துடன் கோதுமை மாவு, பொடித்த அவலையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கெட்டியாக நன்கு பிசைந்து விரவி ஒரே உருண்டையாக உருட்டி எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதன் மீது ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி அப்படியே 10 நிமிடம் வைக்கவும்.
பின்னர் மோதகம் மோல்டை எடுத்து அதன் உள் பகுதியில் நெய் தடவி ரெடி பண்ணி வைத்த மாவை மோல்டில் வைத்து செய்யவும். அனைத்து மோதகத்தையும் செய்து முடித்ததும் எடுத்து இட்லி தட்டில் நெய் தடவி அதன் மீது மோதகத்தை அடுக்கி ஆவியில் 10 நிமிடம் வேக விடவும். மிகவும் டேஸ்டியான, ஹெல்த்தியான வாழைப்பழ மோதகம் தயார்.
செட்டிநாடு ரங்கூன் புட்டு
தேவையான பொருட்கள்:
முந்திரிபருப்பு _15
திராட்ச்சை _15
தேங்காய் துருவல் _1 கப்
வெல்லம் பொடித்தது _1 கப்
தண்ணீர் _3 கப்
நெய் _1/2 கப்
ஏலக்காய் தூள் _1/2 ஸ்பூன்
ரவை _1 கப்
செய்முறை;
ஒரு பேனில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி முதலில் முந்திரிபருப்பை வறுத்துவிட்டு அத்துடன் திராட்சையை போட்டு வறுத்து தனியாக வைத்து கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை சேர்த்து வெல்லம் கரையும் வரை கொதிக்கவிடவும். பின்னர் ஒரு வாணலியில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி ரவையை போட்டு வறுத்து பொன்னிறமாக வந்ததும் அத்துடன் வெல்லக் கரைசலை வடிகட்டி ஊற்றவும்.
தீயை மீடியமாக வைத்து ரவையை கிளறிவிடவும். ரவை வெந்து சிறிது கெட்டியாகி வரும்போது ஏலக்காய் தூள் போட்டு கிளறி அடுத்து வறுத்து வைத்த முந்திரி, திராட்சை, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறிவிடவும். பின்னர் 2 ஸ்பூன் நெய் ஊற்றி கிளறி 5 நிமிடம் மூடிப் போட்டு வேகவிடவும். தண்ணீர் வற்றி வெந்து வந்ததும் தீயை அணைத்து விட்டு மீதி இருக்கும் நெய்யை ஊற்றி ஒரு கிளறு கிளறி விடவும். நாவிற்கு ருசியான செட்டிநாடு ரங்கூன் புட்டு ரெடி.