
சின்ன தவறு ஏற்பட்டாலும் சமையலில் சிறிதளவு ருசி குறைந்து விடும். சாப்பிடும்பொழுது வீட்டினர் முணுமுணுப்பார்கள். அதை தவிர்க்க சில டிப்ஸ்களை கையாண்டாலே போதும் எப்பொழுதும் மலர்ந்த முகத்துடன் சாப்பிட்டுவிட்டு எழுந்திருப்பார்கள். அதற்கான டிப்ஸ் இதோ:
கறிவேப்பிலை காய்ந்துவிட்டால் அத்துடன் மிளகு, வெந்தயம், சீரகம், மஞ்சள், பெருங்காயம் இவற்றை வறுத்துப் பொடி செய்து மோரில் கலந்து சாப்பிட ருசியாக இருக்கும். இது நல்ல நோய் தடுப்பாற்றலுடையதாகவும் செயல்படும். இந்தப் பொடியை குழம்பு, சாம்பார் வகைகளிலும் சிறிது தூவி இறக்கலாம்.
கட்லட் செய்யும்பொழுது உருளைக்கிழங்கை நீர் ஆவியில் அவித்து, தோல் உரித்து, மற்ற காய்கறிகளுடன் சேர்த்து பிசைந்து தேவையான பொருட்கள் சேர்த்து கட்லெட் செய்தால் கொழ கொழப்பின்றி நீர் கோர்த்துக் கொள்ளாமல் இருக்கும்.
குறிப்பாக காய்கறிகளில் நீரூற்றி வேகவைக்கும்போது அளவுக்கு அதிகமாக நீர் ஊற்றாமல் தேவையான அளவு நீர் ஊற்றி அந்த நீரினையும் சேர்த்து சமைப்பதுதான் நல்லது. இதனால் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்கும்.
சேமியா பாத், உப்புமா, கிச்சடி, சிறுதானிய வெஜிடபிள், போகா போன்றவற்றை செய்வதற்கு கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளை பொடியாக நறுக்கி சிறிதளவு தண்ணீரில் வேகவிட்டு வெங்காயத்துடன் சேர்த்து வதக்கி செய்தால் அதிகமான எண்ணெய் ஊற்றி வதக்க வேண்டிய தேவை ஏற்படாது. காய்கறிகளும் நன்றாக வெந்து இருக்கும்.
சில நேரங்களில் குழம்புப்பொடி, சாம்பார் பொடி, ரசப்பொடி போன்றவற்றை அரைக்கும்போது மஞ்சள் குறைவாக அமைந்துவிடும். அதில் சமைக்கும் பொழுது நிறம் குறைவாக இருக்கும். பார்ப்பதற்கும் அழகாக இருக்காது. அதற்கு மஞ்சள் பொடியை தேவையான அளவு பொடிகள் இருக்கும் சம்படங்களில் கலந்து வைத்து விட்டால் ஒவ்வொரு சமயமும் மஞ்சள் பொடி போட வேண்டிய அவசியம் இருக்காது.
கீரைகளில் மண் அதிகமாக இருக்கும். குறிப்பாக சிவப்புக்கீரையில் அதன் தண்டு பகுதியில் அதிக மண்ணை காணமுடியும். ஆதலால் அவற்றை அப்படியே அகலமான பாத்திரத்தில் தண்ணீர்விட்டு ஊறவைத்து நன்றாக கழுவிய பின்பு, கீரையை நறுக்கி மீண்டும் ஒருமுறை கழுவிவிட்டு சமைத்தால்தான் மண்ணில் லாமல் இருக்கும்.
நான்ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்கும்பொழுது அவற்றை அதிக சூட்டில் பயன்படுத்துவதையும், அதன் மீது எவர்சில்வர் கரண்டிகளை பயன்படுத்துவதையும் தவிர்த்து விடவேண்டும். மரத்தினால் செய்யப்பட்ட கரண்டிகளை பயன்படுத்தினால்தான் கோடு, கீறல் இல்லாமல் இருக்கும். அதில் உள்ள இரசாயனமும் வெளிவராமல் நீண்ட நாட்கள் உழைக்கும்.
பெரியோர்களுக்கு வயதான காலத்தில் ஏற்படும் மலச்சிக்கல் தொந்தரவுகளை போக்குவதற்கு தினசரி உண்ணும் உணவில் காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதேபோல் புரதச்சத்தும் அதிகம் தேவை என்பதால் பால் பொருட்கள், பயறு, கடலை, முட்டை, மாமிசம், மீன் போன்றவற்றை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.
நிறைய ஐட்டங்கள் சமைத்தால் எல்லாவற்றிலும் உப்பு போடுவோம். ஆதலால் உப்பின் தேவை அதிகமாகிவிடும். இரண்டு ருசியான ஐட்டங்களை தேவையான அளவு காய்கறிகள் உடன் எடுத்துக் கொண்டால் அதிகமான உப்பு உடலில் சேர்வதை தவிர்க்கலாம். தினசரி உட்கொள்ளும் உப்பின் அளவை 5 கிராமிற்குள் வைத்துக்கொள்ள இது வசதியாக இருக்கும்.
குளிர்ச்சியான பகுதிகளில் வெயில் அதிகமாக கிடைக்காது. ஆதலால் அங்கு ஊறுகாய் போட்டு வைத்தால் சீக்கிரமாக கெட்டுவிடும். ஊறுகாய் கெடாமல் இருப்பதற்கு ஊறுகாயைப் போட்டு வைக்கும் பாட்டிலில் முதலில் கொஞ்சம் வெதுவெதுப்பான எண்ணெய் ஊற்றி பாட்டில் முழுவதும் சுழற்றி அதன் பிறகு ஊறுகாயைப் போட்டு மேற்பகுதியிலும் அதேபோல் கொஞ்சம் எண்ணெய் சேர்த்துவிட்டால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
ஜவ்வரிசியை ஒரு கடாயில் நன்கு பொரித்து, பொடித்து அதனுடன் கைப்பிடி சேமியா, பால், தண்ணீர், சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து கொதிக்கும்போது வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்க திடீர் பாயசம் ரெடி.