
கோகுலாஷ்டமி ஸ்பெஷல் உப்புச் சீடை செய்வது ரொம்பவும் சுலபம். நிறைய பேர் உப்புச்சீடை வெடித்து விடுமோ என்று பயந்து செய்வதில்லை. சரியான முறையில் செய்தால் ஒன்றும் வெடிக்காது. செய்வதும் சுலபம். கோகுலாஷ்டமி அன்று கிருஷ்ணரை துளசி மாலையால் அலங்கரித்து வெண்ணை, அவல், நெய்யப்பம், உப்புச்சீடை, வெல்லச்சீடை, முறுக்கு, தேன்குழல் என செய்து நிவேதிக்கலாம்.
வெண்ணெய் சீடை:
பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு 1 கப் உளுத்த மாவு 1 ஸ்பூன்
உப்பு தேவையானது
பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன் வெள்ளை எள் 1 ஸ்பூன்
வெண்ணெய் 1ஸ்பூன்
அரிசியைக் களைந்து காட்டன் துணியில் உலர்த்தி, நன்கு உலர்ந்ததும் மிஷினில் கொடுத்து அரைத்து வரவும். வாணலியில் மாவை லேசாக சூடு பண்ண பதப்படுத்திய அரிசி மாவு தயார். ஒரு கப் உளுத்தம் பருப்பை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ள தேன்குழல், தட்டை, நாடா மற்றும் முறுக்கு போன்றவை செய்யும்பொழுது ஒரு கப்பிற்கு ஒரு ஸ்பூன் என்ற அளவில் சேர்த்து செய்ய நன்றாக வரும்.
இதற்கெல்லாம் நேரமில்லை என்பவர்கள் கடையில் இருந்து ரெடிமேட் மாவு வாங்கலாம். பதப்படுத்திய மாவில் செய்தால் பட்சணங்கள் வெளுப்பாக பார்வைக்கும் நன்றாக இருக்கும். அரிசி மாவை லேசாக சூடு செய்வதால் பட்சணங்கள் முறுமுறுப்பாகவும் வரும்.
வாயகன்ற பாத்திரத்தில் அரிசி மாவு, வறுத்த உளுத்தம் மாவு இரண்டையும் சலித்துப் போட்டு உப்பு, பெருங்காயத்தூள், வெள்ளை எள், வெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து மாவை கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இதனை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி, ஊசி கொண்டு லைட்டாக குத்தி விட சீடை வெடித்து விடுமோ என்ற பயம் தேவையில்லை. வாணலியில் எண்ணெய் வைத்து சீடைகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்கு வெந்து, ஓசை அடங்கியதும் எடுத்து விடவும். நன்கு ஆறியதும் காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்க 20 நாட்கள் வரை மணம் குணம் நிறைந்த சீடை தயார்.
வெல்லச் சீடை:
பதப்படுத்திய அரிசி மாவு 1கப்
உளுத்த மாவு 1 ஸ்பூன்
வெல்லம் 3/4 கப்
ஏலக்காய் தூள் 1/2 ஸ்பூன் வெண்ணெய்1 ஸ்பூன்
கருப்பு (அ) வெள்ளை எள் 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் 2 ஸ்பூன்
வெல்லத்தை 1 கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பித்ததும் வடிகட்டி, கையால் உருட்டும் பாகுபதம் வரும் வரை கொதிக்கவிடவும். கெட்டிப் பாகு பதம் வேண்டாம்.
அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, ஏலக்காய் தூள், வெண்ணெய், எள், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை சேர்த்து கையால் பிசிறிக்கொள்ளவும். உருட்டும் பதம் வந்த பாகை அதில் விட்டு கரண்டியால் கலந்துவிடவும். சூடு அதிகம் இருப்பதால் கையால் தொட வேண்டாம். சிறிது சூடு ஆறியதும் உளுத்தம் மாவு சேர்த்து நன்கு பிசைந்து உப்புச் சீடையைவிட சிறிது பெரிய சைஸ் உருண்டைகளாக உருட்டவும்.
வாணலியில் எண்ணெய் வைத்து நான்கைந்து உருண்டைகளாகப் போட்டு நன்கு சிவந்ததும் எடுத்து வைக்கவும். சூடு நன்கு ஆறியதும் காற்று புகாத டப்பாவில் போட்டு பத்திரப்படுத்தவும்.
வெல்லம் சேர்த்திருப்பதால் எண்ணெயில் போட்டதும் இளகி வரும். எனவே அடிக்கடி கிளறாமல் சிறிது நேரம் கழித்து மெதுவாக பிரட்டி விட்டு நன்கு சிவந்ததும் எடுக்கவும். இது சூடாக இருக்கும் பொழுது கரகரப்பாக இருக்காது. சூடு ஆற ஆறத்தான் முறுமுறுப்பு வரும்.