

ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் பெரிய நெல்லிக்காய், ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஊட்டச்சத்து நிறைந்த பழமாகும்.
இதனை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி மேம்படும், கண் பார்வை மற்றும் சரும ஆரோக்கியம் உயரும், செரிமானத்திற்கு உதவும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது. மேலும், இது இரத்தச் சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
நெல்லிக்காயை பொடியாக நறுக்கி குடிக்கும் தண்ணீர் பாட்டில் அல்லது பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொண்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடிக்கலாம்.
இதனை ஊறுகாயாகவும் தொக்காகவும் செய்து வைத்துக்கொண்டு உபயோகிக்கலாம்.
நீண்ட கருங்கூந்தலுக்காக இதனை உபயோகித்து எண்ணெய் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால், முடிஉதிர்வது குறையும்; நீண்ட கருங்கூந்தலும் வளரும்.
அந்த நெல்லிக்காய் கொண்டு செய்யப்படும் ஒரு சில எளிய ரெசிப்பிஸ் இதோ./
நெல்லிக்காய் ஜாம்
தேவையான பொருட்கள்:
பெரிய நெல்லிக்காய் – 1 கிலோ
வெல்லம் – 1 கிலோ
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
ஏலக்காய்த் தூள் – 2 ஸ்பூன்
செய்முறை: நெல்லிக்காயை நன்கு தண்ணீரில் அலசி ஒரு வெள்ளை துணி மீது உலர்த்தவும். நன்கு உலர்ந்த பின் ஒவ்வொன்றாக எடுத்து நன்றாக துடைத்து, கொட்டை நீக்கி வைக்கவும்.
கொட்டை நீக்கிய நெல்லிக்காயை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து பிழிந்து சாறு எடுக்கவும். வெல்லத்தை சுத்தம் செய்து கரைத்து வடிகட்டி வைக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் நெல்லிக்காய் சாறு ஊற்றி, சிறிது சூடானவுடன் வெல்லத்தை சேர்த்து நன்கு கிளறவும். ஜாம் கண்ணாடி பதமாக திரண்டு வரும் போது எலுமிச்சை சாறு, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.
ஆறிய பின் பாட்டிலில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு ரொட்டி அல்லது தோசையில் தடவி சாப்பிட கொடுக்கலாம்.
நெல்லிக்காய் ஜூஸ்
நெல்லிக்காய் சாறுடன் வெல்லம் கலந்து நன்கு கொதிக்கவிடவும். ஜெல் பதமாக ஆனதும் இறக்கி ஆறவிடவும்.
ஆறிய பின் இரண்டு எலுமிச்சை பழங்களின் சாறு பிழிந்து அதனுடன் கலந்து, பாட்டிலில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்ளவும். சிறிய அளவில் எடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குடிக்கலாம்.
நெல்லிக்காய் தொக்கு
சாறு பிழிந்த பின் மீதமுள்ள நெல்லிக்காயில் சிறிதளவு உப்பு, காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து, நல்லெண்ணெயில் வதக்கவும். ஆறிய பின் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து வைத்துக்கொள்ளவும். இதனை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.