
நோ ஈனோ, நோ பேக்கிங், நோ சோக் (soak) கிங்! சுலபமான முறையில் விரைவாக வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய சோயா ஜங்க் - பச்சைப் பட்டாணி கட்லட் எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்.
சோயா ஜங்க் - பச்சைப் பட்டாணி கட்லட் ரெசிபி.
தேவையான பொருட்கள்:
1.சோயா ஜங்க் 200 கிராம்
2. பொட்டுக் கடலை 200 கிராம்
3.கார்ன் ஃபிளேக்ஸ் 250 கிராம்
4.பச்சை மிளகாய் 3
5.மிளகுத் தூள் ¾ டீஸ்பூன்
6.சீரகத் தூள் ¾ டீஸ்பூன்
7.இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டீஸ்பூன்
8.வேக வைத்த பச்சைப் பட்டாணி 200 கிராம்
9.ஃபிரஷ் கொத்தமல்லி இலைகள் ஒரு கைப்பிடி
10. கறிவேப்பிலை 10 இலைகள்
11.உப்பு தேவையான அளவு
12.எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு பவுடராக்கி ஒரு தட்டில் கொட்டவும். கார்ன் ஃபிளேக்ஸை மிக்ஸியில் போட்டு கொர கொரப்பாக பொடித்து மற்றொரு தட்டில் கொட்டவும். சோயா ஜங்க்கை தண்ணீரில் போட்டு வேக வைக்கவும். பின் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
ஆறிய பின் தண்ணீரிலிருந்து ஒட்டப் பிழிந்து எடுத்து மிக்ஸியில் போடவும்.
அதனுடன் பச்சை மிளகாயை கிள்ளிப்போடவும். மிக்ஸியில் நன்கு அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துப்போடவும். அதனுடன் உப்பு, பொட்டுக்கடலை பவுடர் சேர்க்கவும். கைகளால் நன்கு பிசையவும். அதில் மிளகுத்தூள், சீரகத் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.
வேகவைத்த பச்சைப் பட்டாணியை ஸ்மாஷரை வைத்து ஒன்றிரண்டாக மசிக்கவும். அதையும் சோயா ஜங்க் கலவையுடன் சேர்க்கவும். பிறகு மல்லி இலை, கறிவேப்பிலைகளையும் சேர்த்து அனைத்தையும் நன்கு பிசைந்துகொள்ளவும். அதிலிருந்து ஒரு உருண்டை
மாவைப் பிய்த்து அதை சிலிண்டர் வடிவாக்கி கார்ன் ஃபிளேக்ஸ் பொடியில் பிரட்டி எடுக்கவும். கைகளால், கட்லட் வடிவத்தை சமப்படுத்திக் கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். சூடானதும், செய்து வைத்துள்ள கட்லட்களை எண்ணெய்யில் போட்டு, மிதமான தீயில் எல்லாப் பக்கமும் சிவந்து வருமாறு பொரித்து எடுக்கவும். சூடாக சாஸ் தொட்டு உட்கொள்ளவும்.