

சைவ உணவுப் பிரியர்களுக்கு நல்ல மணத்துடன் கூடிய , பிரியாணி போன்ற சுவை கொண்டது பச்சை பட்டாணி புலாவ். அதை ருசியாக செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 200 கிராம் பொடியாக நறுக்கியது
பச்சைப் பட்டாணி : 100 கிராம்
பட்டை - 3 துண்டுகள்
ஏலக்காய் - 3
கிராம்பு -3
பிரிஞ்சி இலை - 3
அன்னாசி பூ -2
மராட்டி மொக்கு- 2
சோம்பு - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு -1 தேக்கரண்டி
நெய் - 1 மேசைக் கரண்டி
பச்சை மிளகாய் - 3
புதினா - ஒரு கைப்பிடி
மல்லித்தழை - ஒரு கைப்பிடி
ரீபைண்ட் ஆயில் - 1 மேசைக் கரண்டி
முந்திரி - தேவையான அளவு
உலர் திராட்சை - சிறிது (விரும்பினால்)
இஞ்சி விழுது - 2 தேக்கரண்டி
பூண்டு விழுது -2 தேக்கரண்டி
பாஸ்மதி அரிசி - 2 கப் அல்லது 250கி
பச்சை பட்டாணி புலாவ் செய்முறை :
பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி விட்டு ஊறவைத்து கொள்ளவும். புதினா , கொத்தமல்லி , பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.வாணலியில் சிறிது நெய் மற்றும் எண்ணெய் விட்டு சோம்பு , கிராம்பு , பட்டை , பிரிஞ்சி இலை , ஏலக்காய், மராட்டி மொக்கு , அன்னாசிப் பூ ஆகியவற்றை நன்கு வாசம் வரை லேசான தீயில் வறுக்கவும். வாசம் வந்ததும் அதில் நறுக்கிய வெங்காயத்தை இட்டு அதன் பச்சை தன்மை மாறும் வரை வதக்கவும் . அதனுடன் மிக்ஸியில் அரைத்து வைத்திருந்த புதினா மல்லி கலவையை சேர்ந்து கிளறி விடவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கி கொள்ளவும்.
பச்சை வாடை போன உடன் முந்திரி , திராட்சையை இந்த கலவையில் போட்டு ஒரு முறை கிளறி விடவும். விருப்பப் படாதவர்கள் திராட்சையை தவிர்த்து விடலாம். பச்சை பட்டாணியை மசாலா கலவையில் சேர்த்து , அதனுடன் சிறிது உப்பையும் சேர்த்து அடிப்பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும். இப்போது பச்சை பட்டாணி புலாவ் செய்ய அடிப்படை மசாலா கலவையை தயார் செய்தாகி விட்டது.
இப்போது இந்த கலவையில் 3 அரை கப் தண்ணீர் அல்லது 400 மிலி தண்ணீரை சேர்த்து கலவையை நன்றாக கொதிக்க விடவும். சீரகம் மற்றும் மிளகை பொடியாக அரைத்து கொதிக்கும் மசாலா தண்ணீரில் சேர்த்து விட்டு , ஊற வைத்த பாஸ்மதி அரிசையும் போட்டு ஒரு முறை அடிவரை ஒட்டாமல் கிளறி விட்டு பாத்திரத்தை மூடி விட வேண்டும். குக்கர் என்றால் இரண்டு விசில் வரும் வரை காத்திருக்கவும். குக்கரை விட மற்ற பாத்திரத்தில் செய்யும் போது புலாவ்வில் நீர் கோர்த்துக் கொள்ளாமல் சுவையாக வரும்.
புலாவ் வெந்ததும் பாத்திரத்தை திறந்து 2 தேக்கரண்டி நெய்யை ஊற்றி கிளறி 2 நிமிடம் தீ இல்லாமல் மூடி வைக்க வேண்டும். இப்போது நல்ல மணமான சுவையாக பச்சைப் பட்டாணி புலாவ் தயாராகி விட்டது. இந்த பச்சைப் பட்டாணி புலாவிற்கு, தொட்டுக் கொள்ள சரியான தேர்வாக இருக்கும். விடுமுறை நாட்களில் ஒரே மாதிரி வெஜிடபிள் பிரியாணி செய்து போரடிக்காமல் , இது போன்று வித்தியாசமாக செய்து கொடுத்து வீட்டாரின் பாராட்டைப் பெறலாம்.