
வெந்தயக்கீரை பூரி
தேவை:
கோதுமை மாவு – 500 கிராம்
வெந்தயக்கீரை – 6 கட்டு
பச்சை மிளகாய் – 4
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – அரை லிட்டர்
செய்முறை:
கீரையின் இலைகளை மட்டும் எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும்.
கீரையுடன் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த உடனே உப்பு சேர்த்து கோதுமை மாவுடன் கலந்து கொள்ளவும். அதன்பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மாவை சிறு சிறு வட்டங்களாக தேய்த்து, எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும். சத்தான வெந்தயக்கீரை பூரி ரெடி.
******
வெந்தயக்கீரை பிரியாணி
தேவை:
பாசுமதி அரிசி - 2 கப், வெந்தயக்கீரை - 2 கட்டு,
பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 4, தேங்காய்ப்பால் - ஒரு கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
அரைக்க:
இஞ்சி - ஒரு துண்டு,
பூண்டு - 4 பல்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 5,
தனியா - ஒரு டீஸ்பூன்,
கரம் மசாலா - அரை டீஸ்பூன்.
தாளிக்க:
பட்டை - ஒரு துண்டு,
நெய் - 4 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊறவைத்தபின், வேகவைத்து முக்கால் பதமாக வெந்ததும் எடுத்து வைக்கவும்.
வெந்தயக்கீரையின் இலைகளை மட்டும் நன்கு ஆய்ந்து சுத்தம் செய்து வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
நெய்யை அடுப்பில் காயவைத்து பட்டையைப் போட்டு தாளித்து கீரையைச் சேர்க்கவும்.
பிறகு, வெங்காயம், ஒரு சிட்டிகை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் தக்காளியைப் போட்டு அரைத்த விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
அத்துடன் தேங்காய்ப்பாலைச் சேர்த்து தேவையான உப்பு போட்டு வடித்த சாதத்தையும் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
சேர்ந்தாற்போல் வெந்து வந்ததும் அழுத்திவிட்டு ஒரு தட்டால் மூடி வைத்து அடுப்பில் சிம்மில் 10 நிமிடம் வைத்து பிறகு இறக்கவும்.
புது சுவையில் வெந்தயக்கீரை பிரியாணி தயார்.
*******
வெந்தயக்கீரைப் பொங்கல்
தேவை:
பச்சரிசி – 1 கப்
பாசிப் பருப்பு – அரை கப்
வெந்தயக் கீரை (பொடியாக நறுக்கியது) – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
இஞ்சி – 1 துண்டு
கறிவேப்பிலை சிறிது
நெய் – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – அரை தேக்கரண்டி
உப்பு-தேவைக்கு ஏற்ப
தாளிக்க:
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பட்டை – துண்டு
லவங்கம் – 2
ஏலக்காய் – 1
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 3 டீஸ்பூன்.
செய்முறை:
அரிசி, பருப்பை ஒன்றாக அலம்பி ஆறரை கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் சேர்த்து. அடுப்பில் சிம்மில் வைத்து நன்கு வேகவிடுங்கள். பாதியளவு வெந்ததும் நெய், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து வேகவிடுங்கள். வெங்காயம், தக்காளி, இஞ்சி போன்றவற்றைப் பொடியாக நறுக்குங்கள்.
நெய், எண்ணெயைக் காயவைத்து மிளகு, சீரகம், பட்டை, லவங்கம், ஏலக்காய், தாளித்து, வெங்காயம், இஞ்சி சேர்த்து சிறிது வதக்கி, இதனுடன் வெந்தயக் கீரையை சேருங்கள். சிறிது உப்பும் சேர்த்து நன்கு வதங்கியதும் தக்காளி சேருங்கள். வெந்தயக்கீரை வெந்ததும், பொங்கலில் சேர்த்து நன்கு கிளறுங்கள். கம கம வெந்தயக் கீரை பொங்கல் தயார்.
*******
வெந்தயக்கீரை கடைசல்
தேவை:
வெந்தயக்கீரை - 2 கப் , பூண்டு - 6 பல்,
வெங்காயம் - 1,
தேங்காய்த் துருவல் - ஒரு கப்,
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெந்தயக் கீரையை அலசி, நீரை வடிய விட்டு, அதனுடன் பூண்டை தோல் உரித்து, போட்டு, வதக்கிய வெங்காயம் சேர்த்து அடுப்பில் வைத்து வேகவிடவும். கீரை வெந்ததும் இறக்கி வைத்து உப்பு போட்டு மத்தால் கடையவும். தேங்காயைக் பால் எடுத்து கீரையில் ஊற்றவும். மிளகுத்தூளைப் போட்டு பரிமாறவும். சுவையான ஆரோக்கியமான வெந்தயக் கீரை கடைசல் ரெடி.