பூவிருந்தவல்லி பெருமாள் கோவில் தோசை சாப்பிட்டு இருக்கீங்களா?

பெருமாள் கோவில் தோசை...
பெருமாள் கோவில் தோசை...

துரை அழகர் கோவில் என்றதும் நம் நினைவிற்கு வருவது கோவில் தோசை. அதுபோலவே செங்கற்பட்டிற்கு அருகில் அமைந்துள்ள சிங்கபெருமாள் கோவில் பாடலத்ரி நரசிம்மர் கோவிலிலும் மிளகு தோசை மிகவும் பிரசித்தமானது.

சென்ற வாரம் பூவிருந்தவல்லியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து முடித்து கோவிலுக்குள் இருந்த பிரசாதக் கடைக்குச் சென்றபோது வழக்கமாக பெருமாள் கோவில் பிரசாதக் கடைகளில் விற்கப்படும் மிளகு தட்டை, சர்க்கரைப் பொங்கல் மற்றும் புளியோதரையுடன், தோசையும் பிரசாதமாக விற்கப்படுவதைக் காண நேர்ந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெருமாள் தரிசனத்தை முடித்துக் கொண்டு பிரசாதக் கடைக்கு வந்து தோசையை மிகவும் விரும்பி வாங்கி சாப்பிடுவதையும் காண முடிந்தது.

சற்றே தடிமனான தோசையின் மீது நல்லெண்ணெய் கலந்த மிளகாய்ப்பொடியை ஊற்றித் தருகிறார்கள். ஒரு தோசையின் விலை முப்பது ரூபாய். ஆர்வம் மேலிட ஒரு தோசையை வாங்கி சாப்பிட்டுப் பார்த்தபோது அந்த தோசை வழக்கமான தோசையைப் போல அல்லாமல் வித்தியாசமான சுவையுடன் இருந்ததை உணர முடிந்தது.

பூவிருந்தவல்லி வரதராஜப்பெருமாள் கோவிலில் பிரசாதக் கடை வைத்திருக்கும் வடக்குப்பட்டு வேதாந்த தேசிகன் அவர்களை சந்தித்து இந்த கோவில் தோசையைப் பற்றியும் தோசை செய்முறையைப் பற்றியும் கேட்டோம். அதற்கு அவர் மிகுந்த ஆர்வத்துடன் பதிலளித்தார்.

“கடந்த 2012 லே இருந்து இந்த கோவில்லே தோசையை விற்பனை செய்யறேன். வழக்கமாக தோசை மாவை தயார் செய்வது போலவே புழுங்கலரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைக் கலந்து தோசை மாவை தயார் செய்து தோசையை வார்க்கறதுக்கு முன்னாலே மாவிலே மிளகு, பெருங்காயம், சுக்குப்பொடி, சீரகம் எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து பொடி செய்து அதை மாவிலே சேர்த்து கொஞ்சம் நல்லெண்ணெயை விட்டு நல்லா கலந்து தோசையை வார்ப்போம். கூடவே நாங்களே தயார் செய்த இடிச்ச மிளகாய்ப் பொடியையும் நல்லெண்ணையும் தொட்டுக்கத் தர்றோம். இரண்டையும் சேர்த்து சாப்பிட்டா சுவை வித்தியாசமா இருக்கும்.”

இதையும் படியுங்கள்:
மற்றவர் பார்வைக்கு வசீகரமாக தெரிய செய்ய வேண்டிய 7 விஷயங்கள்!
பெருமாள் கோவில் தோசை...

ஒரு தோசை முப்பது ரூபாய் என்பது நியாயமான விலையாக இருக்கிறது. கோவிலுக்குள் அமர்ந்து தோசையை சாப்பிடும்போது சுவை சற்று கூடுதலாகவே இருப்பது போலத் தோன்றுகிறது. ஒரு ஆரோக்கியமான உணவை சாப்பிட்ட திருப்தியும் மனதில் ஏற்படுகிறது.

கோவிலின் பிரசாதக் கடையில் மிளகு தட்டை, சர்க்கரைப் பொங்கல் மற்றும் கோவில் புளியோதரையும் கிடைக்கிறது. அவற்றைப் பார்க்கும் போதே வாங்கி சுவைக்க வேண்டும் என்ற ஆவல் மனதில் பிறக்கிறது.

நீங்கள் பூவிருந்தவல்லிக்குச் செல்ல நேர்ந்தால் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று தாயாரையும் பெருமாளையும் சேவித்து கோவிலில் கிடைக்கும் பெருமாள் கோவில் தோசையை வாங்கி சாப்பிட்டுப் பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com