

பொதுவாக மக்களுக்கு பிடிக்காத காய்கறிகள் என்று வரும் போது அதில் முதலிடத்தில் இருப்பது பாகற்காய்தான். அதனைத் தொடர்ந்து பூசணிக்காய், பரங்கிக்காய், சௌசௌ போன்ற காய்கறிகள் உள்ளன. ஆச்சரியமளிக்கும் விதமாக இவை அனைத்தும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் காய்கள்.
பாகற்காயைப் பொறுத்தவரை அதன் கசப்பு சுவைதான் அதை விரும்பத்தகாததாக ஆக்குகிறது. ஆனால் சில எளிய மற்றும் எளிதான சமையலறை தந்திரங்களைப் பயன்படுத்தி கசப்பைக் குறைக்கலாம். அவை என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
கரடுமுரடான மேற்பரப்பை நீக்கவும்
பாகற்காயில் கசப்பை நீக்குவதற்கான முதல் வழி அதன் மேலே இருக்கும் கரடுமுரடான மேற்பரப்பை நீக்க வேண்டும். அதை எளிதாக்க, கத்தி அல்லது பீலரைப் பயன்படுத்தி தேவையானதைச் செய்யுங்கள். அதை நன்கு கழுவி, பின்னர் சிறிய க்யூப்ஸ் அல்லது வட்ட வடிவில் வெட்டவும்.
விதைகளை அகற்றவும்
கசப்பைக் குறைக்க மற்றொரு எளிய வழி, வெளிப்புற தோலை உரித்த பிறகு விதைகளை அகற்றுவது. இது பாகற்காயின் கசப்பை பெருமளவில் குறைக்கும் என்று கூறப்படுகிறது.
உப்பை தேய்க்கவும்
பாகற்காய் மீது உப்பைத் தேய்த்து சிறிது நேரம் அப்படியே வைத்திருக்கவும், இது கசப்பைக் குறைக்கும் என்பது பரவலான நம்பிக்கை. நீங்கள் செய்ய வேண்டியது, ஒவ்வொரு துண்டிலும் உப்பை சமமாக தேய்த்து, சமைப்பதற்கு முன் 20-30 நிமிடங்கள் வைக்கவும், நன்கு ஊறியவுடன் சமைக்கவும்.
உப்பு நீரில் ஊற வைக்கவும்
பாகற்காயைக் கொதிக்கும் உப்பு நீரில் ஊறவைப்பது கசப்பைக் குறைக்க உதவும் என்றும் பரிந்துரைக்கப் படுகிறது. நன்கு கொதிக்கவைக்கப்பட்ட நீரில் உப்பு கலந்து அதில் விதைகளை நீக்கிய பாகற்காய் துண்டுகளை போட்டு வைக்கவேண்டும்.
சாறை வெளியேற்றவும்
பாகற்காயில் உப்பைத் தடவி ஊறவைத்தவுடன், அது இயற்கையான சாற்றை வெளியிடுகிறது. கசப்பைக் குறைக்க சமைப்பதற்கு முன் அனைத்து கூடுதல் சாறுகளையும் பிழிய பரிந்துரைக்கப்படுகிறது. அதற்குப் பின் சமைக்கும்போது அதில் மிகவும் குறைவான கசப்பு சுவையே இருக்கும்.
தயிரையும் பயன்படுத்தலாம்
சமைப்பதற்கு முன் அல்லது சாப்பிடுவதற்கு முன் குறைந்தது ஒரு மணிநேரத்திற்கு பாகற்காய் துண்டுகள் மீது தயிர் பூசுவதன் மூலமும் நீங்கள் கசப்பைக் குறைக்கலாம்.
-பொ. பாலாஜி கணேஷ்