

கிரைண்டர், மிக்ஸி எல்லாம் புழக்கத்திற்கு வராதபோது வீட்டில் உள்ளவர்கள் திடீரென்று ஏதாவது ஒரு பலகாரம் செய்து தரும்படி கேட்பார்கள். அப்பொழுது இந்த குத்து பணியாரத்தை செய்து கொடுத்து சாப்பிடுவது உண்டு.
குத்து பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்:
பச்சரிசி, புழுங்கல் அரிசி தலா- அரை கப்
உப்பு, எண்ணெய் -தேவையான அளவு
வெல்லத் துருவல் -அரை கப்
செய்முறை:
அரிசிகளை நன்றாக ஊறவைத்து, கெட்டியாக கரகரப்பாக உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். அரைத்த உடனேயே அடிகனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி அரைத்த மாவில் ஒரு பகுதியை அந்த எண்ணெய்யில் போட்டு அகப்பை அல்லது மத்து போன்றவற்றால் நன்றாக குத்திக்கொண்டே வந்தால் கம கம என்று பணியார வாசனை வரும். அதுதான் வெந்ததற்கான அடையாளம். இதுபோல் எல்லா மாவையும் செய்து சூட்டுடன் வெல்லத் துருவல், ஏலப்பொடி கலந்து சாப்பிட ருசியாக இருக்கும்.
கோதுமை ரவை ஆப்பிள் பாயசம்
செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை ரவை -ஒரு கப்
துண்டுகளாக்கிய ஆப்பிள்- ஒரு கப்
பால்- ஒரு கப்
நெய்- மூணு டேபிள் ஸ்பூன்
வெல்லத் துருவல்- ஒன்றரை கப்
ஏலப் பொடி -சிறிதளவு
பாதாம் சீவல், முந்திரி, திராட்சை வறுத்தது, வெள்ளரி விதை எல்லாமாக சேர்த்து கைப்பிடி அளவு.
செய்முறை:
கோதுமை ரவையுடன் ஆப்பிள் துண்டங்கள், பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் கலந்து வேகவிடவும். நன்றாக வெந்ததும் வெல்லத்துருவல், நெய், ஏலப்பொடி மற்றும் நட்ஸ் வகைகளை கலந்து எல்லாம் ஒன்றாக சேர்ந்து வரும் பொழுது அடுப்பில் இருந்து இறக்கவும். இதை சூடாகவும், குளிரவைத்தும் எப்படி சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கும் அப்படியே கொடுக்கலாம். திடீரென்று விருந்தினர்கள் வந்தால் இது போல் செய்து அசத்தலாம்.
கொள்ளுப்பொடி
தேவையான பொருட்கள்:
வறுத்த கொள்ளு- ஒரு கப்
குண்டு வர மிளகாய்-8
கருவேப்பிலை காய்ந்தது -கைப்பிடி அளவு
எண்ணெயில் பொரித்த கட்டிப் பெருங்காயம் -சிறு துண்டு
எண்ணெயில் பொரித்த புளி- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
மேலே கூறிய அனைத்து பொருட்களையும் அப்படியே பொடித்து தினசரி சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு வர பிரசவித்த பெண்களுக்கு கால்சியம் சத்து கிடைப்பதுடன் வயிறும் குறைந்து, அழகுடன் ஆரோக்கியமும் பெறலாம்.