Healthy samayal recipes
Chenaikkizhangu pulav

ஆரோக்கியம் + சுவை = அசத்தலான சோயா சங்க்ஸ் - சேனைக்கிழங்கு புலாவ்!

Published on

ஸோயா சங்க்ஸ், ஸோயா பீன்ஸ்ஸிலிருந்து எடுக்கப்படும் புரத சத்து.  தசைகளின் வளர்ச்சிக்கும், திசுக்களைப் பழுது பார்க்கவும் உதவுகிறது. நார்ச்சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

சேனைக்கிழங்கு நார்ச்சத்து செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கும், மலச்சிக்கலையும் தடுப்பதற்கும் உதவுகிறது. குறைந்த கலோரி கொண்டது. இதயம் சம்பந்தப்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க வல்லது.

ஆரோக்கியத்தை அளிக்கும் ஸோயா சங்க்ஸ் மற்றும் ஸூரண் (சேனைக்கிழங்கு) இரண்டையும் உபயோகித்து செய்யக்கூடிய ஒரு "யம்மி ஸ்பெஷல் புலாவ்"  பின்வருமாறு:

தேவை:

* ஸூரண் (சேனை)  300 கிராம்

* ஸோயா சங்க்ஸ் 100 கிராம்

* பாஸ்மதி அரிசி   2 கப்

* வெங்காயம்           3

* பூண்டு                      3 பல்

* பச்சை மிளகாய்   4

* இஞ்சி                      1 துண்டு

* கிராம்பு + பட்டை (பொடித்தது)          2 டீ ஸ்பூன்

* சீரகம்                        1 டீஸ்பூன்

* சோம்பு                     1/2 டீஸ்பூன்

* முந்திரிப்பருப்பு    10 (ஒன்றிரண்டாக ஒடித்துக்கொள்ளவும்)

* ரீஃபைன்டு ஆயில்  3 டேபிள் ஸ்பூன்

* உப்பு                  தேவையானது

* கொத்தமல்லி மற்றும் புதினா இலை  (சுத்தம் செய்தது)    2 கப்

இதையும் படியுங்கள்:
வீட்டிலேயே செய்யக்கூடிய 3 கலர் ஃபுல்லான சைவ கொரியன் உணவுகள்!
Healthy samayal recipes

செய்முறை:

முதலில் வாயகன்ற பாத்திரத்தில், ஸோயா சங்க்ஸ்ஸைப் போட்டு சூடான நீரை விடவும். சற்று நேரம் ஊறவிட்டு பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.

சேனையைத் தோல் சீவி சிறு துண்டுகளாக நீளவாக்கில் நறுக்கி அலம்பி வைத்துக்கொள்ளவும்.

பாஸ்மதி அரிசியைக் களைந்து வைக்கவும்.

வெங்காயம், பூண்டு இவைகளின் தோல்களை நீக்கியபிறகு,  பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, புதினா இலைகளைச் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். விழுது ரெடி.

அடிக்கனமான வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், முந்திரிப்பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்தெடுத்த பின், மீதியிருக்கும் எண்ணெயில், சீரகம், சோம்பு, கிராம்பு-பட்டை பொடியைப்போட்டு தாளிக்கவும். இத்துடன் அரைத்து வைத்திருக்கும் விழுதைச் சேர்த்து வதக்கவும். நறுக்கி வைத்திருக்கும் சேனைத் துண்டுகளை இதில் போட்டு லேசாக வதக்கவும். உடனே, களைந்து வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியைப் போட்டு வதக்கி, ஸோயா சங்க்ஸ்ஸை சேர்க்கவும். தேவையான உப்பு போடவும்.

மேற்கூறியவைகளை குக்கருக்கு மாற்றி, 1-க்கு 2 என்ற கணக்கில் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து வேகவிடவும்.

இதையும் படியுங்கள்:
காய்கறிகள் கெடாமல் பாதுகாக்க 10 அரிய குறிப்புகள்!
Healthy samayal recipes

மூன்று விசில் வந்ததும், அடுப்பை அணைக்கவும்.

சற்று நேரம் சென்று குக்கரைத் திறக்கையில், கம-கமவென வாசனை ஊரைத் தூக்கும். இதில், வறுத்த முந்திரிப் பருப்புக்களையும், ஃப்ரெஷ் கொத்தமல்லி இலைகளையும்  பரவலாகத் தூவி லேசாக கிளறி எடுத்து தட்டில் போட்டு சாப்பிட்டால் செம டேஸ்ட்டாக இருக்கும் இந்த "யம்மி ஸோயா சங்க்ஸ்-ஸூரண் காம்பினேஷன் புலாவ்!" அப்படியே சாப்பிடலாம்.

தேவைப்பட்டால்,  தொட்டுக்கொள்ள பொரித்த மரச்சீனி அப்பளம் அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸ்.

logo
Kalki Online
kalkionline.com