

வாழைப்பூ சாப்பிடுவது சிறுநீரக கற்களை கரைக்கும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். இது ஒரு மருந்து பொருளாக செயல்படுகிறது. இதனை அப்படியே சாப்பிடுவது துவர்ப்பு தன்மையை ஏற்படுத்தும். அதனால் இவ்வாறு பருப்பு வடை போல் செய்து சாப்பிடுவது சுவை மற்றும் ஆரோக்கியமான ஒன்றாக இருக்கும்.
நம் அன்றாட வாழ்வில் உளுந்த வடை, பருப்பு வடை, கீரை வடை, வெங்காய வடை இது மாதிரிதான் சாப்பிட்டு இருப்போம். இன்று அதற்கு மாற்றாக வாழைப்பூவில் பருப்பு வடை செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். கடைகளில் வடை வாங்கி சாப்பிடுவதை காட்டிலும் நம் வீட்டிலேயே செய்து ஆரோக்கியமாக இருக்கும். இது ஒரு புதுவிதமான சுவையில் நன்றாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ - கடலைப்பருப்பு - 200 கிராம்
பெரிய வெங்காயம். - 2
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 2 பல்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
பெருஞ்சீரகம் - தேவையான அளவு
பச்சரிசி மாவு - தேவையான அளவு
செய்முறை:
வாழை பூவில் இருக்கும் வெண்ணிற தாழ் போன்ற பகுதி மற்றும் தண்டு பகுதியை நீக்கிவிட வேண்டும். இப்பகுதி உணவு சமைக்கும்போது வேகாது.
பின் அதனை நன்கு சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். கடலை பருப்பை நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். கடலை பருப்பு நன்கு ஊறியவுடன் மிக்ஸியில் கடலை பருப்பு, வாழைப்பூ, பெருஞ்சீரகம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பின் அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றவும் . அதனுடன் வெங்காயம், உப்பு, கறிவேப்பிலை, பச்சரிசி மாவு சேர்த்து நன்றாக பிசையவும் ஐந்து நிமிடங்கள் அதனை அப்படியே விடவும். பச்சரிசி மாவு சேர்ப்பது வடையின் மொறு மொறு தன்மையை அதிகப்படுத்தும். வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த உடன் நாம் அரைத்து வைத்ததை பருப்பு வடை வடிவத்தில் எண்ணெயில் சேர்க்க வேண்டும். பருப்பு வடை வெந்து இரண்டு புறமும் நன்கு சிவந்து வரும் வரை பொரித்து எடுக்கவும்.
சுவை மிகுந்த கமகமக்கும் வாழைப்பூ பருப்பு வடை தயார். இந்த வாழைப்பூ பருப்பு வடை மொறு மொறு என நல்ல சுவையில் இருக்கும். விழா காலங்களில், உறவினர்கள் வரும் பொழுது பொதுவாக செய்யும் வடைகளைவிட இந்த வாழைப்பூ பருப்பு வடை செய்து கொடுப்பது மிகுந்த சுவையில் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் பிடித்தமான மற்றும் ஆரோக்கியமான உணவாக இருக்கும்.