
கிச்சடி என்பது தெற்காசிய உணவு வகைகளில் அரிசி மற்றும் பருப்பு வகைகளால் ஆன ஒரு உணவாகும். இதில் அரிசிக்கு பதிலாக ஓட்ஸ் சேர்த்து செய்யும் கிச்சடி மதிய அல்லது இரவு உணவிற்கு நன்றாக வேலை செய்யும் ஆரோக்கியமான, நிறைவான உணர்வை தரும் ஒரு எளிய மற்றும் சத்தான உணவாகும். ஓட்ஸ் உடன் காய்கறி சேர்த்து செய்யும் கிச்சடியானது சத்தானது, இலகுவானது மற்றும் ஜீரணிக்க எளிதானது. டயட்டில் இருப்பவர்கள், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த உணவு மிகவும் ஏற்றது. இந்த ஆரோக்கியமான ஓட்ஸ் காய்கறி கிச்சடியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஓட்ஸ் - கால் கப்
சிறுபருப்பு - கால் கப்
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1
கேரட் - 1
பச்சை பட்டாணி - கால் கப்
ப.மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது- அரை டீஸ்பூன்
பீன்ஸ் - 10
கொத்தமல்லி இலை - சிறிதளவு
சீரகம் - கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காய்கறிகள், பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வறுத்து தனியாக வைத்து கொள்ளவும்.
அதேபோல் சிறுபருப்பை கடாயில் போட்டு சிவக்க வறுத்து வேகவைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து சிறிது வதக்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
அடுத்து அதில் வேக வைத்த காய்கறிகள், வேக வைத்த சிறுபருப்பு, தேவையான அளவு உப்பு மற்றும் ஓட்ஸ் சேர்த்து வதக்கவும். பின்னர் ஓட்ஸ் வேக 1 கப் சுடுதண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும், மூடி போட்டு மிதமான தீயில் 8 நிமிடங்கள் வேகவிடவும்.
8 நிமிடம் கழித்து மூடியை திறந்து கிச்சடி வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
இப்போது சூப்பரான ஓட்ஸ் வெஜிடபிள் கிச்சடி ரெடி. இதனை தயிருடன் சாப்பிட அருமையாக இருக்கும்.