

ராகி மாவு என்றாலே — ராகி களி, ராகி தோசை, ராகி மால்ட், ராகி இட்லி, ராகி பக்கோடா என்பவையே நமக்கு தெரிந்தவை. அதற்கிடையில் "ராகி உப்புமா?" என்கிற கேள்வி வரலாம். இது செய்வதற்கும் எளிது, சாப்பிடுவதற்கும் சுவையான, ஆரோக்கியமான சிற்றுண்டி.
ராகி உப்புமா
தேவையான பொருட்கள்:
அரிசி குருணை – 1 டம்ளர்
ராகி மாவு – 2 டம்ளர்
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
பச்சை மிளகாய் – 6 (உங்கள் காரத் தேவைக்கேற்ப மாற்றலாம்)
தாளிக்க:
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ½ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு (விருப்பத்திற்கேற்ப)
செய்முறை:
இட்லி பாத்திரத்தில் ராகி மாவும், அரிசி குருணையுடன் தண்ணீர், உப்பு சேர்த்து புட்டு மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். இந்த கலவையை steamer தட்டில் பரப்பி வைத்து வேகவைத்து எடுக்கவும்.
வேகவைத்த புட்டு மாவை ஆறவிடவும். பின்னர் நன்றாக உதிர்த்துக் கொள்ளவும்.
தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு தாளிக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். உதிர்த்த புட்டு மாவை சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
பெருங்காயத்தூள் சேர்த்து சிறிது நேரம் மூடிவைக்கவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும். விருப்பப்பட்டால் தேங்காய் துருவல் சேர்த்துக்கொள்ளலாம். சூடாக தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்.
ராகி அல்வா
தேவையான பொருட்கள்:
ராகி மாவு – 2 டம்ளர்
நெய் – 1 கப்
வெல்லப்பாகு – 3 டம்ளர்
முந்திரி பருப்பு – 10
திராட்சை – 10
ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்
செய்முறை:
ராகி மாவை தண்ணீரில் கலந்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய் ஊற்றி, முந்திரி பருப்பு மற்றும் திராட்சையை வறுத்து எடுத்து வைக்கவும். அடிகனமானப் பாத்திரத்தில் வெல்லப்பாகை ஊற்றி நன்கு கிளறவும்.
அதில் ராகி மாவு கலவையை நிதானமாக நெய் சேர்த்து தொடர்ந்து கிளறவும். கலவை நன்றாக சுருண்டு வந்தவுடன் ஏலக்காய் தூள், முந்திரி, திராட்சை சேர்த்து மீதமுள்ள நெய்யையும் சேர்த்து கிளறி இறக்கவும்.
ஒரு நெய் தடவிய தட்டில் பரப்பி, ஆறிய பிறகு தேவையான வடிவங்களில் நறுக்கவும். சுவையான மற்றும் ஆரோக்கியமான ராகி அல்வா ரெடி!