கரஞ்சி:
மைதா மாவு ஒரு கப்
உப்பு சிறிது
ஸ்டஃபிங்கிற்கு:
தேங்காய் துருவியது ஒரு கப்
பொடித்த சர்க்கரை கால் கப்
ஏலக்காய் பொடி 2 சிட்டிகை
ஜாதிக்காய் பொடி 2 சிட்டிகை
வறுத்த வெள்ளை எள் 2 ஸ்பூன்
உலர் பழங்கள்:
பாதாம், முந்திரி, திராட்சை சிறிது
எண்ணெய் பொரிப்பதற்கு
மைதாவை தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 20 நிமிடங்கள் ஊறவிடவும். வாணலியில் நெய்விட்டு தேங்காய் துருவலை ஈரம் போக சிவக்க வறுத்து தனியே வைக்கவும். பாதாம், முந்திரி போன்ற உலர் பழங்களை சூடு செய்து கொரகொரப்பாக பொடிக்கவும். எள்ளை பரபரவென்று வெடிக்கும்வரை வறுக்கவும். ஒரு பாத்திரத்தில் வறுத்த தேங்காய், பொடித்த உலர் பழங்கள், சர்க்கரை, ஏலப்பொடி, ஜாதிக்காய்பொடி, எள் போன்றவற்றை சேர்த்து கலக்க ஸ்டஃபிங் தயார்.
மைதா மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி மெல்லிய பூரிகளாக திரட்டவும். அதில் ஒரு ஸ்பூன் ஸ்டஃபிங்கை வைத்து விளிம்புகளை தண்ணீர் தொட்டு அழுத்தி மூடவும். நன்றாக எண்ணெய் காய்ந்ததும் நான்கு நான்காக போட்டு பொரித்தெடுக்கவும். ஒரு வாரம் ஆனாலும் கெடாது. பள்ளி விட்டு வரும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
லட்டு:
கடலை மாவு ஒரு கப்
சர்க்கரை ஒன்றரை கப்
லெமன் ஃபுட் கலர் சிறிது
ஏலப்பொடி 1 ஸ்பூன்
உடைத்த முந்திரி துண்டுகள் 20
டைமண்ட் கல்கண்டுகள் சிறிது (விருப்பப்பட்டால்) எண்ணெய் பொரிக்க
கடலை மாவை தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். இதனை பூந்தி கரண்டியில் விட்டு நன்கு காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் பூந்திகளாக தேய்க்கவும். நன்கு வெந்ததும் பூந்திகளை வடிகட்டியில் போட்டு (எண்ணெய் நன்றாக வடிய) வைக்கவும். அடிகனமான உருளியில் சர்க்கரையை சேர்த்து அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு ஃபுட் கலர் சேர்த்து பாகு தயாரிக்கவும். பாகு கொதிக்கும் பொழுது ஏலப்பொடி சேர்த்து கம்பி பதம் வந்ததும் இறக்கவும். அதில் பூந்திகளை சேர்த்து முந்திரித் துண்டுகளை நெய்யில் வறுத்து சேர்க்கவும். சிறிது சூடு ஆறியதும் கல்கண்டுகளை சேர்த்து நன்கு கலந்து லட்டுகளாக பிடிக்கவும்.