
மேத்தி மலாய் கட்டா
செய்ய தேவையான பொருட்கள்:
மேத்தி ஆய்ந்து சுத்தம் செய்து நறுக்கியது- ஒரு கப்
கடலை மாவு -ஒரு கப்
மைதா, அரிசி மாவு- ஒரு டீஸ்பூன்
வெங்காயம் அரிந்தது- 2
அரிந்த பச்சை மிளகாய்- 3
இஞ்சி, பூண்டு விழுது- ஒரு ஸ்பூன்
தக்காளி ப்யூரி -முக்கால் கப்
சாம்பார் பொடி -இரண்டு டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா தூள்- அரை டீஸ்பூன்
ஓமம்- அரை டீஸ்பூன்
கிரீம்- 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய்- இரண்டு டேபிள் ஸ்பூன்
உப்பு- தேவைக்கு ஏற்ப
செய்முறை:
கடலைமாவுடன் வெந்தயக்கீரை, ஓமம், பச்சை மிளகாய், அரிசி மைதா மாவு அனைத்தையும் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவில் சிறிது எடுத்து விரல் நீளத்திற்கு உருட்டி கொதிக்கும் தண்ணீரில் போட்டு ஐந்து நிமிடம் வேக விட்டு எடுத்து வைக்கவும். கட்டா ரெடி.
பின்னர் கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி ப்யூரி சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி தூள்கள் மற்றும் உப்பு சேர்த்து கட்டா வடித்த நீரை ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். நன்றாக கொதித்ததும் கட்டாக்களை போட்டு மேலும் சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கி அதில் கிரீம் சேர்த்து பரிமாறவும்.
நாக்குக்கு ருசியான, சத்தான ரிச்சான இந்த மேத்தி மலாய் கட்டாவை அனைவரும் விரும்பி உண்பர். மேத்தியின் கசப்பு தன்மைக்காக அதை விரும்பி உண்ணாதவர்கள் கூட இப்படி செய்து கொடுத்தால் ஒரு பிடி பிடிப்பார்கள்.
நெய் தால் அடை!
செய்யத் தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு- கால் கப்
கடலைப்பருப்பு -கால் கப்
புழுங்கல் அரிசி- கால் கப்
பச்சரிசி -கால் கப்
கோதுமை ரவை -கால் கப்
வற்றல் மிளகாய் -4
2 -நறுக்கிய வெங்காயம்
கருவேப்பிலை -ஒரு ஆர்க்கு
உப்பு, நெய்- தேவைக்கு ஏற்ப
சோம்பு, சீரகம் தலா -அரை டீஸ்பூன்
செய்முறை:
துவரம் பருப்பு, கடலை பருப்பு, புழுங்கல் அரிசி, பச்சரிசி நான்கையும் ஊறவிட்டு கெட்டியாக கொரகொரவென்று வற்றல் மிளகாய், சோம்பு, சீரகம், அனைத்தையும் சேர்த்து அரை க்கவும். அதனுடன் கோதுமை ரவையை இரண்டு சுற்று சுற்றி கருவேப்பிலையும் ஒரு சுற்று சுற்றி எடுத்து உப்பு, வெங்காயத்தை அந்த மாவில் கலந்து நன்றாக பிசைந்து விடவும்.
பின்னர் தோசை கல்லை அடுப்பில் போட்டு தேவையான அளவு மாவை எடுத்து கையாலே தட்டி தோசை கல்லில் போட்டு நெய் விட்டு மொறு மொறுவென சுட்டு எடுக்கவும். சாப்பிட சுவையாக இருக்கும். சைட் டிஷ் எதுவும் தேவை இல்லை. அப்படியே சாப்பிடலாம்.