
தீபாவளிக்கு முறுக்கு சுடுவது என்பது அனைவரின் வீடுகளிலும் இருக்கும் ஒரு சமையல் அனுபவம். தற்போது அதிகரித்து வரும் இயற்கை உணவுகளான சிறுதானியத்தில் முறுக்கு சுட்டு குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சத்துக்களை அளிப்போமா?
தேவையானவை:
குதிரைவாலி அரிசி - ஒரு கப்
பச்சரிசி -அரை கப்
உளுந்து - கால் கப்
பாசிப்பருப்பு - கால் கப்
பொட்டுக்கடலை - கால் கப்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன் வெள்ளை எள் - 1/2 டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
குதிரைவாலி அரிசியுடன் பச்சரிசி, உளுத்தம் பருப்பு, லேசாக வறுத்த பாசிப்பருப்பு, பொட்டுக்கடலை சேர்த்து மெஷினில் தந்து நைசாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் சீரகம், பெருங்காயத்தூள், எள், வெண்ணைய் உப்பு சேர்த்து நன்கு கலந்த பிறகு தேவையான அளவு தண்ணீர் தெளித்து முறுக்கு மாவு பதத்துக்கு (கொஞ்சம் தளர) பிசைய வேண்டும்.
பிடி முறுக்கு அச்சில் எண்ணெய் தடவிய பின் மாவை குழலில் நிரப்பி எண்ணெய் தடவிய வாழை இலை அல்லது எண்ணெய் தடவிய ஜல்லிக் கரண்டியின் பின்புறம் மாவை முறுக்காக பிழிந்து வாணலியில் எண்ணெய் காய வைத்து பிழிந்த முறுக்குகளை போட்டு பொன்னிறமாக ஆனதும் எடுத்து பரத்தி சூடு ஆறியதும் எடுத்து ஏர் டைட் டப்பாவில் போட்டு தேவைக்கு எடுக்கவும்.
இது மழைக்காலம் என்பதால் முறுக்குகளை நீண்ட நேரம் வெளியில் வைத்தால் நமுத்துப் போய் ருசி மாறும்.