
மனிதன் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்த பின்னும். மனிதனின் மனமானது குரங்கு போல் இன்றும், அங்கும் இங்கும் அலை மோதிக் கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட மனதினால் மகிழ்ச்சி,கோபம்,துக்கம், ஏக்கம், சோர்வு, சோம்பேறித்தனம், அதிகப்படியான சிந்தனை, மன அழுத்தம் என்று ஒரு நாளில் நமக்கு எத்தனை உணர்வுகள் ஏற்படுகின்றன?!. நல்ல எண்ணங்களும் நல்ல உணர்வுகளும் நம்வாழ்க் கையை நல்ல முறையில் அமைக்கும். ஆனால், சில எண்ணங்கள் நம் வாழ்க்கையைச் சீர்குலைக்கும் நிலைக்குத் தள்ளிவிடும்.அப்படிப்பட்ட உணர்வுகளிலிருந்து உடனடியாக விடுபடுவது எப்படி என்று பார்ப்போம்.
தேவையில்லாதவற்றுக்கு அதிகப்படியாகச் சிந்திக்கும் குணமுடையவர்களாக நீங்கள் இருந்தால் முதலில் அதிலிருந்து வெளிவருவதற்கு ஒரு காகிதத்தில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எழுதுங்கள். நீங்கள் எழுதுவதால் உங்களுக்குத் தீர்வு கிடைக்கவில்லை எனினும், உங்கள் எண்ணத்தில் உள்ளதை எழுத்தின் வழியாக வெளியேற்றி விடலாம். நீங்கள், எதைப் பற்றி அதிகம் சிந்திக்கிறீர்கள் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
நீங்கள் எந்த ஒரு செயலுமே செய்யாமல் உடல் சோர்வாக இருப்பது போன்று உங்களுக்குத் தோன்றினால், உடனடியாக ஒரு குட்டி தூக்கம் போடவும். இதனால் உங்கள் உடல் சோர்வு உடனடியாக நீங்கிவிடும். ஆனால், சில திரைப்படங்களில் கூறுவது போல் "ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து டயர்டு ஆகி" இருந்தால் அந்த உடல் சோர்வை நீக்க எந்த அருமருந்தும் வழியும் கிடையாது.
உங்களைச் சுற்றி இருக்கும் சூழல், உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால், கொஞ்ச தூரம் எழுந்து ஏதாவது நடைப்பயிற்சி செய்து பாருங்கள். இதனால் உங்கள் மன அழுத்தம் குறையும். நடைப் பயிற்சி என்ற உடன் கையில் தொலைப்பேசியும், காதில் ஒரு ஹெட்செட்டும் மாட்டிக்கொண்டு செல்ல தயாராகி விடக்கூடாது. கையில் எந்தப் பொருளும் இல்லாமல் உங்களைச் சுற்றி இருக்கும் சூழலை மட்டும் கவனித்துக் கொண்டு நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். அது, நிச்சயம் உங்கள் மனதைப் புத்துணர்ச்சி அடையச் செய்யும்.
உங்களுக்குச் சோம்பேறித்தனம் அதிகமாக இருந்தால், நீங்கள் வைத்திருக்கும் தொலைப்பேசியின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள். நமக்கு இருக்கும் பெரும்பாலான வேலைகளைச் செய்ய விடாமல் தடுப்பதும், நமக்கு இருக்கும் நேரத்தை எடுத்துக் கொள்ளுவதும், இந்தத் தொலைப்பேசி மட்டுமே. அதன் பயன்பாட்டை அதிகம் இல்லையென்றாலும், கொஞ்சமாவது குறைக்க முயற்சி செய்யவும்.
ஒன்றுமே நடக்காத விஷயங்களுக்கு எல்லாம் நீங்கள் சோகமாக உள்ளீர்கள் எனில், நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் - உடற்பயிற்சி. உடற்பயிற்சி உங்கள் மனநிலையைச் சீர் செய்து நல்ல மன உணர்வை அளிக்கும்.
உங்களுக்குக் கோபம் அதிகமாக வந்தால் மெல்லிசைப் பாடல்களைக் கேளுங்கள். இசைக்குப் பெரும் சக்தி உண்டு. நாம் ஏதாவது ஒரு மோட்டிவேஷன் பாடலைக் கேட்டால், அதனால் ஒரு உத்வேகத்தை அடைவோம். மகிழ்ச்சியான பாடல்களைக் கேட்டால் நாமும் மகிழ்ச்சியாக உணர்வோம் .அதனால் இனிமையான இசை கேளுங்கள்.
இந்தச் சின்ன சின்ன செயல்கள் செய்வதன் மூலம் திடீர் என்று மாறும் மனநிலையைக் கட்டுப்படுத்த முடியும்.