
ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி ரசம் ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.பெரிய பழுத்த தக்காளி 2
2.புளி சிறிய லெமன் சைஸ் அளவு
3.வேக வைத்த துவரம் பருப்பு 1 டீஸ்பூன்
4.பூண்டு 4 பல்
5.காய்ந்த சிவப்பு மிளகாய் 3
6.கடுகு 1 டீஸ்பூன்
7.சீரகம் 1 டீஸ்பூன்
8.மிளகுத் தூள் ½ டீஸ்பூன்
9.மஞ்சள் தூள் 1 சிட்டிகை
10.பெருங்காயத் தூள் 1 சிட்டிகை
11.கறிவேப்பிலை 2 இணுக்கு
12.கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி அளவு
13.ரசப் பவுடர் 1 டீஸ்பூன்
14.நெய் 1½ டீஸ்பூன்
15.தண்ணீர் 3 கப்
16.உப்பு தேவையான அளவு
செய்முறை:
தக்காளிப் பழங்களை நன்கு கழுவி 1½ கப் தண்ணீரில் போட்டு மிருதுவாàகும்வரை வேகவிடவும். பின் பழங்களை ஆற வைத்து தோலை உரிக்கவும். ஒரு சாஸ்பேனில் உரித்த பழங்களையும் துவரம் பருப்பையும போட்டு சிறிது தண்ணீர் விட்டு கைகளால் நன்கு பிசைந்து கரைத்துக் கொள்ளவும். புளியை பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து, கரைத்து, வடி கட்டி எடுக்கவும். தக்காளி கரைசலுடன் புளித் தண்ணீரை சேர்க்கவும்.
பிறகு அதில் பூண்டுப் பற்களை நசுக்கிப் போட்டு, உப்பு, மஞ்சள் தூள், மிளகுத் தூள், ரசப் பவுடர், தண்ணீர் எல்லாவற்றையும் சேர்த்து, அடுப்பில் மிதமான தீயில் பத்து நிமிடம் கொதிக்க விடவும். இன்னொரு சிறிய கடாயில் நெய் விட்டு கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள் ஆகியவற்றைப் போட்டு சிறு தீயில் பொரிய விடவும். பின் கறிவேப்பிலை சேர்த்து வெடித்ததும் தாளிப்பை ரசத்தில் கொட்டவும். அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லி இலைகளைப் போடவும். ரசம் ரெடி. சூப் போல குடிக்கலாம். சாதத்துல ஊற்றியும் சாப்பிடலாம்.
க்ரீமி மேங்கோ யோகர்ட் ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.பழுத்த மாம்பழக் கூழ்(Pulp) 1 கப்
2.குளிர்வித்த யோகர்ட் 1½ கப்
3.சர்க்கரை 2½ டேபிள் ஸ்பூன்
4.ஏலக்காய் பவுடர் ¼ டீஸ்பூன்
5. குங்குமப் பூ இழைகள் 5-6
6.புதினா இலைகள் 8
செய்முறை:
யோகர்டை மிக்ஸியில் போட்டு மிருதுவாகவும் க்ரீமியாகவும் வரும்வரை கலக்கவும். பின் அதனுடன் மாம்பழக் கூழ், சர்க்கரை, ஏலக்காய் பவுடர் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியை மேலும் ஐம்பது செகண்ட்ஸ் ஓட விடவும். பின் அதை ஒரு கண்ணாடி பௌலுக்கு மாற்றி ஃபிரிட்ஜில் வைத்து அரைமணி நேரம் குளிரவிடவும்.
பின் வெளியில் எடுத்து அதன் மேற்பரப்பில் குங்குமப் பூ இழைகள் மற்றும் புதினா இலைகள் தூவி பரிமாறவும். கோடைக்கேற்ற, புத்துணர்ச்சியூட்டும் க்ரீமி மேங்கோ யோகர்டை அனைவரும் விரும்பி அருந்துவர்!!