
எத்தனை டிபன் வகைகள் வந்தாலும் எல்லோரும் விரும்பி சாப்பிடுவது இட்லியைத்தான். அதை விதவிதமாக செய்து அசத்தும் பொழுது அலுப்பே இல்லாமல் சாப்பிடுவார்கள். கோதுமை இட்லி செய்முறை விளக்கம் இதோ.
கோதுமை இட்லி செய்ய தேவையான பொருட்கள்;
கோதுமை -நான்கு டம்ளர்
உளுந்து- முக்கால் டம்ளர்
காய்கறி கலவை- இரண்டு கைப்பிடி
செய்முறை:
இரண்டையும் சுத்தம் செய்து தனித்தனியாக தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். பிறகு நைசாக அரைத்து உப்பு போட்டு புளிக்க வைக்கவும்.
கேரட் ,பீன்ஸ், தனியா, கருவேப்பிலை போன்றவற்றை பொடியாக இரண்டு கைப்பிடி அளவு அரிந்து, சிறிதளவு எண்ணெயில் வதக்கி இந்த மாவுடன் சேர்த்து கலந்து இட்லி வார்த்தால் ருசியாக இருக்கும். கூடவே சத்தும் கிடைக்கும். சம்பா கோதுமை, சாதா கோதுமை என்று எந்தவித கோதுமையில் செய்தாலும் இதன் ருசி நன்றாகவே இருக்கும். வித்தியாசமாக இருப்பதால் அனைவரும் விரும்பி உண்பர்.
ராகி இட்லி
செய்ய தேவையான பொருட்கள்:
முழுராகி- மூன்று டம்ளர்
உளுந்து- முக்கால் டம்ளர்
முருங்கைக் கீரை- கைப்பிடி அளவு
சீரகம்- சிறிதளவு
சின்ன வெங்காயம்- கைப்பிடி அளவு அரிந்தது
செய்முறை:
முழு கேழ்வரகையும், உளுந்தையும் தனித்தனியாக ஊறவைத்து நைசாக அரைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து புளிக்க வைக்கவும். நன்கு புளித்தவுடன் சிறிது கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், சின்ன வெங்காயம் தாளித்து கீரையை நன்றாக வதக்கி விட்டு மாவில் சேர்த்து இட்லியாக வார்த்தெடுக்க வேண்டியது தான். இதை சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி தாங்கும். சுகர் பேசன்ட்டுக்கும் நல்லது.
ரவை இட்லி
தேவையான பொருட்கள்:
வெள்ளை ரவை -நான்கு டம்ளர்
உளுந்து- முக்கால் டம்ளர்
வேர்க்கடலை- ஒரு டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு- ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் -தாளிக்க
கருவேப்பிலை, தனியா- சிறிதளவு
செய்முறை:
வறுத்த ரவையுடன் உளுந்தை நைஸ் ஆக அரைத்து அதில் கலந்து உப்பு சேர்த்து புளிக்க வைக்கவும். சிறிதளவு கடாயில் எண்ணெய் விட்டு கொடுத்துள்ள பொருட்களை நன்றாக தாளித்து மாவில் சேர்த்து கலக்கவும்.
வெள்ளையான ரவையில் அங்கங்கே வேர்கடலை, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, தனியா என்று தெரிவதால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். சாப்பிடவும் ருசியாக இருக்கும். பெரும்பாலும் ரவை இட்லி என்றால் தயிர் சேர்த்துதான் செய்வோம். அதை விடுத்து இப்படி செய்தாலும் ருசியாக சாப்பிடலாம். செய்து அசத்துங்க. தேங்காய் சட்னி உடன் சாப்பிட ருசியாக இருக்கும்.
இந்த மூன்று இட்லிக்குமே வெங்காயம், தக்காளியை கடலைப்பருப்பு, உளுந்து, கடுகு சேர்த்து எண்ணெயில் வதக்கி அதனுடன் மிளகாய், தேங்காய் சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.