

உளுந்து மாவு கஞ்சி
தேவையான பொருட்கள்:
அரைத்த உளுந்த மாவு -ஒரு கப்
அரிசி மாவு -இரண்டு டேபிள் ஸ்பூன்
ஏலத்தூள் - ஒரு டீஸ்பூன்
சுக்கு பொடி -அரை டீஸ்பூன்
தேங்காய் துருவல் -3 டீஸ்பூன்
வெல்லம் -பொடித்தது -ஒரு கப்
நெய் -ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை:
வாணலியில் நெய் ஊற்றி தேங்காய் துருவலை சேர்த்து வறுக்கவும். அரிசி மாவில் தண்ணீர் சேர்த்து கரைக்கவும். ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதித்ததும் வடிகட்டவும். அதே பாத்திரத்தில் வடிகட்டிய வெல்ல கரைசலை ஊற்றி கொதித்ததும் உளுந்த மாவு அரிசி மாவு இரண்டையும் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து ஊற்றி அதில் கட்டி படாமல் கலக்கவும்.
மிதமான தீயில் வைத்து மேலும் மூணு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். கலந்துகொண்டே இருக்க வேண்டும். நன்கு வெந்து நல்ல மணம் வரும் சமயம் ஏலத்தூள், சுக்குத்தூள், தேங்காய்துருவல் சேர்த்து இரண்டு நிமிடம் வேக வைத்து இறக்கவும் .சுவையான உளுந்து மாவு கஞ்சி தயார். இடுப்பு வலிக்கு ஏற்றது.
சாமை அரிசி கஞ்சி
தேவையான பொருட்கள்:
சாமை அரிசி - ஒரு கப்
பாசிப்பருப்பு -கால் கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று.
பச்சை மிளகாய் - 1
பட்டை, கிராம்பு ,ஏலத்தூள் - தலா ஒன்று
சீரகம் -ஒரு ஸ்பூன்
மல்லித்தழை - சிறிது
பூண்டு பல்- 5
புதினா - சிறிது
கருவேப்பிலை -சிறிது
உப்பு -தேவைக்கு.
எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கீறிய பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதங்கியதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் பட்டை, கிராம்பு, ஏலத்தூள் சேர்த்து வதக்கியதும், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பின் சாமை அரிசியையும் சேர்த்து வறுக்கவும் .
அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து மல்லி புதினா கலந்து உப்பு போட்டு குக்கரை மூடி நன்றாக வேகவிட்டு இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். சத்தான சூடான சாமை அரிசி கஞ்சி தயார். குளிர்காலத்தில் குடிக்க மிகவும் ஆரோக்கியமானது.
வரகு அரிசி கஞ்சி
தேவையான பொருட்கள்:
வரகு அரிசி - ஒரு கப்
சீரகம் -கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
சின்ன வெங்காயம் - 10
பூண்டு பல்- 5
தக்காளி -ஒன்று
கொத்தமல்லி இலை -சிறிது
உப்பு -தேவைக்கு
எண்ணெய் -ஒரு டீஸ்பூன்
செய்முறை:
அடுப்பில் குக்கர் வைத்து எண்ணெய் ஊற்றி இதில் நறுக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
அதில் சீரகத்தை சேர்த்து தாளிக்கவும். வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். வரகு அரிசியை 10 நிமிடம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து சேர்த்து வதக்கவும். விருப்பப்பட்டால் பாசி பருப்பு அல்லது பச்சை பயிறு சிறிது சேர்க்கலாம் இதில் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு கலந்து குக்கரை மூடி சிறு தீயில் வேக விடவும். இரண்டு விசில் விட்டு இறக்கியதும், அதில் கொத்தமல்லி தழை தூவி குடிக்கலாம். சத்தான வரகு அரிசி கஞ்சி தயார். இதனை குடித்து வந்தால் உடல் எடை குறையும்.