

பாதாம் அடுக்கு பூரி செய்ய தேவையான பொருட்கள்:
ஊறவிட்டு தோல் உரித்த பாதாம் பருப்பு- கால் கப்
மைதா- 2கப்
உப்பு-1 சிட்டிகை
சர்க்கரை -இரண்டு கப்
எண்ணெய் -பொரிக்க தேவையான அளவு
அரிசி மாவு -ஒரு டீஸ்பூன்
செய்முறை:
பாதாம் பருப்பை மிக்ஸியில் அரைத்து அதனுடன் ஒரு கப் மைதா, உப்பு சேர்த்து பூரி மாவு பதத்திற்கு மாவை பிசைந்து வைக்கவும்.
மைதாமாவு ஒரு கப்புடன் அரிசி மாவைக் கலந்து நன்றாக அடித்து பேஸ்ட் ஆக்கி வைக்கவும்.
சர்க்கரையில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு பாகை கம்பி பதமாக காய்ச்சி வைக்கவும்.
பிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து உருண்டைகள் செய்து அதை வட்டங்களாக தேய்க்கவும். அந்த வட்டத்தின் மேலாக மைதா பேஸ்ட்டை தடவி அவற்றை சுருட்டி வட்டங்களாக வெட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து பாகில் போட்டு எடுத்து வைக்கவும். பாதாம் அடுக்கு பூரி ரெடி.
மைதாவை சிறு சிறு உருண்டைகளாக நான்கு உருண்டைகள் உருட்டி, அதை ஒரே அளவில் பூரிகளாக தேய்த்து, ஒவ்வொரு பூரிக்கும் இடையில் மைதா பேஸ்ட்டை தடவி, அதை அப்படியே சிறு சிறு துண்டங்களாக வெட்டி எண்ணெயில் பொரிப்பதும் உண்டு. விருப்பப்பட்டவர்கள் இப்படியும் செய்யலாம். ஆனால் பாகில் போட்டவுடன் ஒரு தட்டில் எடுத்து வைத்து விடவேண்டும். அப்பொழுதுதான் எல்லா பூரிக்கும் சரியான அளவு பாகு கிடைக்கும்.
கம்பு உருண்டை
செய்ய தேவையான பொருட்கள்:
கம்பு -ஒரு கப்
பாசிப்பயறு -அரை கப்
பொட்டுக்கடலை -அரைக்கப்
வெல்லத் துருவல் -இரண்டு கப்
ஏலப்பொடி -அரை டீஸ்பூன்
எண்ணெயில் பொரித்தெடுத்த தேங்காய் பற்கள் -ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை:
கம்பு மற்றும் பாசிப்பருப்பை தனித்தனியாக வாசம் வரும் வரை வறுத்து, பொட்டுக்கடலையை லேசாக சூடு காட்டினால் போதும். இவற்றை மிக்ஸியில் நைசாக பொடித்து சலிக்கவும். சலித்த மாவுடன் தேங்காய் பற்களை பொடித்து சேர்க்கவும்.
வெல்லத்துருவலில் தேவையான அளவு தண்ணீர் வைத்து இளம் பாகாக காய்ச்சி அதில் ஏலப்பொடியை கலந்துவிடவும்.
பாத்திரத்தில் உள்ள மாவில் இந்த வெல்லப்பாகையும், நெய்யையும் கலந்து நன்றாக கிளறி உருண்டைகளாகப் பிடிக்கவும். கம கம வாசனையுடன் சாப்பிடுவதற்கு சத்தாகவும், ருசியாகவும் இருக்கும் இந்தக் கம்பு உருண்டை.