ஸ்வீட் கார்ன் ஸ்பெஷல்: கிரீமி சீஸ் தந்தூரி ஷாட் - வெள்ளரிக்காய் தம்பலி ரெசிபி!
தேவையான பொருட்கள்:
1.வேக வைத்த அல்லது ரோஸ்ட் செய்த ஸ்வீட் கார்ன் 1 கப்
2.பட்டர் 1 டேபிள் ஸ்பூன்
3.காஷ்மீரி ரெட் சில்லி பவுடர் 1 டீஸ்பூன்
4.தந்தூரி மசாலா 1 டீஸ்பூன்
5.சாட் மசாலா ½ டீஸ்பூன்
6.ரோஸ்ட் செய்த ஜீரா பவுடர் ½ டீஸ்பூன்
7.பிளாக் சால்ட் ½ டீஸ்பூன்
8.உப்பு தேவையான அளவு
9.லெமன் ஜூஸ் 2 டீஸ்பூன்
10.கொத்தமல்லி இலைகள் 1 டேபிள் ஸ்பூன்
11.கிரீம் சீஸ் ½ கப்
12.மயோனைஸ் ½ டேபிள் ஸ்பூன்
13.பூண்டு பவுடர் ½ டீஸ்பூன்
14.கருப்பு மிளகுத் தூள் ¼ டீஸ்பூன்
15.உப்பு ஒரு சிட்டிகை
செய்முறை:
ஒரு கடாயில் பட்டரை போட்டு சூடாக்கவும். உருகியதும் ஸ்வீட் கார்னை அதில் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு, ரெட் சில்லி பவுடர், தந்தூரி மசாலா, சாட் மசாலா, ஜீரா பவுடர், பிளாக் சால்ட் மற்றும் சாதாரண உப்பையும் சேர்த்து, மசாலா அனைத்தும் கார்ன் மீது ஒட்டிக் கொள்ளும் வரை, 2-3 நிமிடங்கள் மீடியம் தீயில் வைத்து கலந்துவிடவும்.
பிறகு அதில் ஒரு டீஸ்பூன் லெமன் ஜூஸ் மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்த்துக் கலந்து தனியே இறக்கி வைக்கவும்.
ஒரு பௌலில் கிரீம் சீஸ், பூண்டு பவுடர், மிளகுத் தூள், மயோனைஸ், ஒரு டீஸ்பூன் லெமன் ஜூஸ் மற்றும் உப்பு சேர்த்து, மிருதுவான, கிரீமி டெக்ச்சர் வரும்வரை நன்கு அடித்துக் (whip) கலக்கவும். ஷாட் கிளாஸின் அடிப்பாகத்தில் ஒரு அடுக்கு கிரீம் சீஸ் கலவையை வைத்து அதன் மீது தந்தூரி கார்னை தாராளமாக அள்ளி வைத்து, மேற்பரப்பில் கொத்தமல்லி இலைகள் தூவி அலங்கரிக்கவும். பிறகு அப்படியே பரிமாறவும். விரும்பினால் குளிர் சாதனப் பெட்டிக்குள் வைத்தெடுத்து ஜில்லென்றும் உண்ணலாம்.
வெள்ளரிக்காய் தம்பலி ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.வெள்ளரிக்காய் (நடுத்தர அளவு) 1
2.கெட்டித் தயிர் 1 கப்
3.தேங்காய் துருவல் ½ கப்
4.பச்சை மிளகாய் 2
5.இஞ்சி ஒரு அங்குல துண்டு 1
6.சீரகம் ½ டீஸ்பூன்
7.உப்பு தேவையான அளவு
8.தேங்காய் எண்ணெய் 1 டீஸ்பூன்
9.கடுகு ½ டீஸ்பூன்
10.காய்ந்த மிளகாய் 1
11.பெருங்காயத் தூள் ¼ டீஸ்பூன்
12.ஃபிரஷ் கறிவேப்பிலை ஒரு இணுக்கு.
செய்முறை:
வெள்ளரிக்காயை தோல் நீக்கி பொடிசா நறுக்கிக்கொள்ளவும். அதை ஒரு மிக்ஸியில் போட்டு அதனுடன் தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்தெடுக்கவும். அதனுடன் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன், காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, தம்பலியில் கொட்டிக் கலக்கவும். சூடான சாதத்தில் சேர்த்து பிசைந்து சாப்பிட, சுவை அள்ளும்.

