
சாம்பார், ரசம், குழம்பு தவிர்த்து சில நேரங்களில் பருப்புப் பொடி, கறிவேப்பிலைப் பொடி, பூண்டுப்பொடி போன்ற பொடி வகைகளையும் சாதத்தில் சேர்த்து நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றிப் பிசைந்து உண்கிறோம்; இட்லி தோசைக்கும் தொட்டுக் கொள்கிறோம். அவ்வகையில், ஃபிளாக்ஸ் ஸீட் (Flax seed) பொடி எவ்வாறு தயாரிப்பது என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
ஃபிளாக்ஸ் ஸீட் பொடி ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.ஃபிளாக்ஸ் ஸீட் ½ கப்
2.கடலைப் பருப்பு (சன்னா டால்) ¼ கப்
3.உளுத்தம் பருப்பு ¼ கப்
4.பெரிய சைஸ் பூண்டுப் பற்கள் 3
5.காய்ந்த சிவப்பு மிளகாய் 8
6.சீரகம் முக்கால் டேபிள் ஸ்பூன்
7.கறிவேப்பிலை 5 இணுக்கு
8.கல் உப்பு தேவையான அளவு
செய்முறை:
ஒரு அடிகனமான கடாயை அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடாக்கவும். சூடேறியதும் கடாயில் ஃபிளாக்ஸ் விதைகளைப் போட்டு ஐந்து நிமிடங்கள் வறுக்கவும். விதைகள் கருகிவிடாமல் கவனமாகப் பார்த்து தீயை அணைத்து விடவும். உடனே அதை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.
அதே கடாயில், கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை, தனித் தனியாக, பொன்னிறமாக வறுத்து மற்றொரு தட்டில் கொட்டவும். பின் சிவப்பு மிளகாய்களை கடாயில் போட்டு கிரிஸ்பியாகும் வரை வறுத்தெடுக்கவும். பிறகு சீரகத்தை கடாயில் போட்டு சிறு தீயில் பொன்னிறமாகி மணம் வரும் வரை வறுத்தெடுக்கவும். இதே முறையில் பூண்டுப் பற்களையும் கருகிவிடாமல் கவனமுடன் வறுத்துக் கொள்ளவும். அனைத்துப் பொருள்களையும் நன்கு ஆறவிடவும்.
முதலில் ஆறிய ஃபிளாக்ஸ் விதைகளை மிக்ஸியில் போட்டு பவுடராக்கிக் கொள்ளவும். பின் அதை ஒரு பாத்திரத்தில் கொட்டவும். உப்பு மற்றும் பூண்டு தவிர, மற்ற பொருட்களை மிக்ஸியிலிட்டு மைய அரைத்து கடைசியாக அதனுடன் உப்பு மற்றும் பூண்டு பற்களை சேர்ந்து ஒரு சுற்று ஓட விடவும். பின் அனைத்தையும் ஃபிளாக்ஸ் பவுடருடன் சேர்த்து நன்கு கலந்து விடவும். ஃபிளாக்ஸ் சீட்ஸ் பொடி தயார்.
சுவையும் மணமும் நிறைந்த ஃபிளாக்ஸ் சீட்ஸ் பொடியை, சாதம், உப்புமா, தோசை, கிச்சடி போன்ற உங்கள் தினசரி உணவுகளுடன் சேர்த்து உண்டு மகிழுங்கள். ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள், நார்ச் சத்து, ப்ரோட்டீன் உள்ளிட்ட பல வகையான சத்துக்கள் ஃபிளாக்ஸ் ஸீட் பொடியிலிருந்து உங்கள் உடம்புக்குக் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை!