
-கல்பனா ராஜகோபால்
கொடுக்காப்புளி வதக்கல்
கொடுக்காப்புளி வெறுமனே சாப்பிட்டால் சிறிது துவர்ப்பு சுவை கொண்டதாக இருக்கும். மேலும் தண்ணீர்த் தாகம் அதிகம் இருக்கும்.
மருத்துவ நன்மைகள்:
செரிமானத்தை மேம்படுத்துகிறது. நீரிழிவு மற்றும் இரத்தச் சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. புண்கள் உருவாகுவதைக் தடுக்கும்.
எலும்பு மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் C, கால்சியம், இரும்பு போன்ற அத்தியாவசிய சத்துக்களை வழங்குகிறது.
அதை வதக்கலாக செய்துகொண்டால் ரச சாதத்திற்கும் தயிர் சாதத்திற்கும் சூப்பரான சைட் டிப்ஸ்.
தேவையானப் பொருட்கள்:
கொடுக்காப்புளி 250 கிராம்
சின்ன வெங்காயம் 100 கிராம்
பூண்டு 10 பல்
தேங்காய் எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்
கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு தலா ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை சிறிதளவு உப்பு தேவையான அளவு
குழம்பு மிளகாய்த்தூள்/ கறிமசால் தலா ஒரு டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
செய்முறை:
முதலில் கொடுக்காப்புளியை தோல் மற்றும் கொட்டை நீக்கி தண்ணீரில் அலசிவைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு கறிவேப்பிலை போட்டு விட்டு பொரிந்தவுடன் சின்ன வெங்காயம் பூண்டு பொடியாக நறுக்கி அதில் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதனுடன் அலசி வைத்துள்ள கொடுக்காப்புளி சேர்த்து மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறிது நேரம் அப்படியே மூடி வைக்கவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து வதங்கவிடவும். பிறகு அதனுடன் மிளகாய்த்தூள் கறிமசால் தூள் சேர்த்து நன்கு கிளறி பச்சை வாசனை போகும் வரை வதக்கி பின் சிறிது நேரம் அப்படியே மூடி வைத்து பிறகு பெருங்காயத் தூள் சேர்த்து இறக்கவும்.
சுவையான கொடுக்காப்புளி வதக்கல் ரெடி!