
கடலைப்பருப்பு கேசரி
தேவை:
கடலைப்பருப்பு – 1 கப்,
பொடித்த வெல்லம் – 1/2 கப்,
தேங்காய்த்துருவல் – 1/4 கப்,
நெய்யில் வறுத்து பொடித்த முந்திரி – 8
ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்,
நெய் – 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
கடலைப்பருப்பை நன்றாக வேகவைத்து, மிக்சியில் அரைக்கவும். கடாயில் நெய் விட்டு கடலைப்பருப்பு விழுது, வெல்லம், தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு கிளறவும். நன்கு சுருண்டு வந்ததும் முந்திரி சேர்த்து, ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து கிளறி பரிமாறவும். சுவையான கடலைப்பருப்பு கேசரி ரெடி.
*****
வெந்தயக்கீரை பணியாரம்
தேவை:
வெந்தயக் கீரை - ஒரு கட்டு, இட்லி மாவு - 250 கிராம், வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - ஒரு கப், எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெந்தயக்கீரையை பொடியாக நறுக்கி வதக்கி, வெங்காயத்தையும் வதக்கி, இட்லி மாவுடன் கலந்து உப்பு சேர்த்துக் கலக்கவும்.
பிறகு, பணியாரக் கல்லில் மாவை ஊற்றி சிறிது எண்ணெய் விட்டு, ஒரு குச்சியால் திருப்பி, வேகவிட்டு எடுக்கவும். சுவையான வெந்தயக் கீரை பணியாரம் தயார்.
******
இனிப்பு மெது வடை
தேவை:
முழு உளுந்து - 150 கிராம்
சர்க்கரை - 100 கிராம்
ஏலக்காய் - 3
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
முழு உளுந்தைக் கழுவி மூன்று மணிநேரம் ஊறவைக்கவும். பின் தண்ணீர் வடித்து மிக்ஸியில் சர்க்கரை, ஏலக்காயோடு சேர்த்து தண்ணீர் இல்லாமல் பேஸ்டாக அரைக்கவும். தேவைப்பட்டால், தண்ணீரை லேசாகத் தெளித்துக் கொள்ளலாம். மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி உப்பு சேர்த்துக்கலக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், தீயை மிதமாக்கவும். இனி, உள்ளங்கையில் தண்ணீர் தொட்டு மாவை எடுத்து, உள்ளங்கையில் வைத்து வடை வடிவத்துக்கு தட்டி எண்ணெயில் விட்டு, இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுத்தால், மொறு மொறு இனிப்பு மெது வடை தயார்.
***
அவல் முறுக்கு
தேவை:
அவல் – 2 கப்,
கோதுமை மாவு – கால் கப், கெட்டி மோர் – 2 கப்,
உப்பு, எள், எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
அவலை நன்றாகக் கழுவி மோருடன் கலந்து முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் எடுத்து உப்பு சேர்த்து முறுக்கு பிழியும் அளவுக்கு கெட்டியாக அரைத்து, கோதுமை மாவு, எள்ளை சேர்க்கவும். அதை முறுக்கு அச்சில் போட்டு, ஒரு துணியில் பிழியவும். இரண்டு அல்லது மூன்று முறை திருப்பிப் போடவும். ஈரம் சிறிது காய்ந்ததும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான அவல் முறுக்கு தயார்.