

பொங்கல் வந்துவிட்டாலே கரும்புகளின் அணி வகுப்புகள் துவங்கிவிடும். தை, மாசி மாதங்களில் மட்டும் கரும்பு தாராளமாக கிடைக்கும் சீசன் இனிப்பு இது. ஆனாலும் ஆசைக்கு இரண்டு கரும்பு கடித்துவிட்டு மற்றதை கடிப்பதற்கு கூட நேரமில்லாமல் என்ன செய்வது என்று தெரியாமல் வாடி கீழே போடுபவர்கள் நிறைய பேர் உண்டு. ஆனால் இனி அப்படி எரியவேண்டாம் இதோ இதுபோன்ற சத்துமிக்க பொங்கலை செய்து குழந்தைகளுக்கு தாருங்கள். உங்களுக்கு நிச்சயம் முத்தம் கிடைக்கும்.
சிவப்பரிசி கரும்புப் பால் பொங்கல்
தேவையான பொருட்கள்:
கரும்பு - 2 கப் ( நறுக்கியது)
சிவப்பரிசி - 3/4 கப்
கடலைப்பருப்பு - 1/4 கப்
வெல்லம்- 3/4 கப்
தண்ணீர் - 4 கப்
நெய் - 1 ஸ்பூன்
ஏலக்காய்- 8
தேங்காய் துண்டுகள்- 1/4 கப்
முந்திரி பருப்பு - 1/4 கப்
செய்முறை:
கரும்புகளை நன்றாக கழுவி எடுத்து மேலிருக்கும் கருப்பு பாகத்தை வெட்டிவிட்டு கத்தி கொண்டு உள்ளிருக்கும் வெள்ளை பகுதியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். இதை மீண்டும் கனமான கல்னால் உதிரி உதிரியாக வெட்டிக்கொள்ளவும். ( மிக்சியில் எளிதாக அரைபட) இப்போது இந்த கரும்புகளை மிக்ஸியில் இட்டு தண்ணீர்விடாமல் அரைத்து ஜூஸாக எடுக்கவும். மேலும் இன்னொரு முறை நீர் விட்டு அரைத்து நன்றாக பிழிந்து கொள்ளவும். இந்த கரும்பு ஜூசை தனியா வைக்கவும்.
அடுத்து சிவப்பு அரிசியை நன்றாக கழுவி அதனுடன் கழுவிய கடலை பருப்பு சேர்த்து குக்கரில் 4 கப் நீரூற்றி 5 நிமிடங்களில் இருந்து 7 நிமிடங்கள் வரை 4 அல்லது 5 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும். சிவப்பரிசி வேக அதிக நேரம் பிடிக்கும் என்பதால் சற்று நேரம் விடவும். இதில் சிறிது தனியே எடுத்து ஆறியதும் மிக்சியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். அரிசியுடன் பொடித்த ஏலக்காய் சேர்த்து வேகவைத்தால் மணமாக இருக்கும்.
இப்போது ஒரு அடி கனமான உருளியில் நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து அதில் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய தேங்காய்களை போட்டு நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும். வறுத்ததும் இதிலேயே முந்திரிப் பருப்புகளை போட்டு வறுத்து சிவப்பரிசிக் கலவையை அதே உருளியில் சேர்த்து பொடித்து வைத்துள்ள வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரையை சிவப்பு அரிசி கலவையுடன் சேரத்து நன்கு கலந்து கொதிக்க வைக்கவும். இதில் அரைத்து வைத்துள்ள அரிசிக்கலவையையும் சேர்த்துக்கிளறவும்.
வெல்லம் உருகி கொதித்து சற்று கெட்டியாகும் பதத்தில் எடுத்து வைத்துள்ள கரும்பு சாற்றை அதில் ஊற்றி மேலும் கொதிக்க விடவும். நேரம் ஆக ஆக இந்த சிவப்பரிசி பொங்கல் கெட்டியாகிவிடும் என்பதால் தளர்வாக இருக்கிறதே என்று நினைக்க வேண்டாம்.
மிகவும் தளர்வாக இருந்தால் கெட்டி தன்மைக்காக ஒரு ஸ்பூன் அரிசிமாவை இரண்டு ஸ்பூன் நீரில் கலந்து சேர்க்கலாம். நார்ச்சத்து விட்டமின்கள் நிறைந்த இந்த சிவப்பரிசி கரும்புப் பால் பொங்கல் செம டேஸ்டில் சாப்பிட ரெடி.