
தற்போது ஆரோக்கிய உணவுகள் மீதான விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் சிறு தானியங்களை அதிகம் விரும்பத் துவங்கிவிட்டோம். அதில் விதவிதமான ரெசிபிகளையும் செய்து பார்த்து மகிழ்ந்து மகிழ்கிறோம். இதோ இங்கு சாமை வைத்து பாரம்பரிய உப்புமாவும் அடையும் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
சாமை உப்புமா:
தேவையானவை:
சாமை -ஒரு கப்
பெரிய வெங்காயம்- 4
பச்சை மிளகாய் -2
காய்ந்த மிளகாய் -2
இஞ்சி -ஒரு அங்குலம்
கருவேப்பிலை கொத்தமல்லி -தேவைக்கு உப்பு- தேவைக்கு ஏற்ப
கடுகு உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு தாளிக்க- தலா கால் டீஸ்பூன்
சோம்பு சீரகம் தலா - கால் டீஸ்பூன்
முந்திரி - 8
நெய்+எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
சாமை அரிசியை சூடான வாணலியில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது அதே வாணலியில் சிறிது நெய் ஊற்றி உடைத்த முந்திரிப்பருப்பை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். மீதமுள்ள நெய் எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு உளுத்தம் பருப்பு கடலை பருப்பு ஆகியவற்றை போட்டு பொரிந்ததும் சோம்பு சீரகம் போட்டு தாளிக்கவும். அத்துடன் நறுக்கிய பச்சை மிளகாய், நீளமாக நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை போட்டு வெங்காயம் பொன்னிறமான உடன் இஞ்சியை துருவி சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் ஒரு கப் சாமைக்கு மூன்று கப் தண்ணீர் வைத்து கொதிக்க வைக்கவும். நீர் கொதிக்கும்போது உப்பு சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுத்த சாமையை சுடுநீரில் சிறிது சிறிதாக சேர்த்துகிளறி மிதமான தீயில் வேகவிடவும். சாமை வெந்து கெட்டியானதும் மேலே நெய்யூற்றிக் கிளறவும். இப்போது உப்புமா வாணலியில் ஒட்டாமல் வரும்போது மேலே கொத்தமல்லித்தழை தூவி கெட்டி சட்னியுடன் சூடாக பரிமாறவும்.
சாமை அடை
தேவையானவை:
சாமை- ஒரு கப்
உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு பாசிப்பருப்பு - தலா கால் கப்
சின்ன வெங்காயம்- 15
மிளகு, சீரகம் சோம்பு -தலா கால் டீஸ்பூன் காய்ந்த மிளகாய்- 8
இஞ்சி - சிறு துண்டு
முருங்கைக்கீரை( இருந்தால்) -ஒரு கைப்பிடி அளவு
-பூண்டு 4 பற்கள்
எண்ணெய் உப்பு –தேவைக்கேற்ப
செய்முறை:
சாமை அரிசி, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கழுவி நான்கு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து மிளகாய் சேர்த்து அரைக்கவும். பாதி அரைத்ததும் அதில் மிளகு, சீரகம், சோம்பு இஞ்சி, பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் முருங்கை கீரை ஆய்ந்த முருங்கைக்கீரை சேர்த்துக் கலக்கி சற்று கனமான அடைகளாக சற்று தாராளமாக எண்ணெய் ஊற்றி அடைகளாக சுட்டு எடுக்கவும். இதற்கும் கெட்டியான தேங்காய் சட்னி அல்லது புதினா சட்னி தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.