
இலுப்பைப் பூ துவையல்:
இலுப்பை பூ ஒரு கப்
மிளகாய் வற்றல் 10
புளி பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு தேவையானது
இலுப்பைப் பூ இனிப்பு தன்மை உடையது. இதனை வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக்கொண்டால் தேவைப்படும் சமயம் காரத் துவையல் செய்து சுட சுட சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு சாப்பிட அமிர்தமாக இருக்கும்.
வெயிலில் காயவைத்த இலுப்பை பூவை வாணலியில் போட்டு நன்கு வறுத்தெடுக்கவும். சிறிது நல்லெண்ணெய் விட்டு மிளகாய் வற்றலையும், புளியையும் தனித்தனியே வறுத்தெடுக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்து எடுத்து உருண்டைகளாக பிடித்து காற்று புகாத டப்பாவில் பத்திரப்படுத்தவும். ஆறு மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.
தேவைப்படும் சமயம் தேவையான அளவு எடுத்து சிறிது தண்ணீர் கலந்து கெட்டித் துவையல்போல் செய்து சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு கலந்து சாப்பிடலாம். இலுப்பைப் பூவில் இருக்கும் இனிப்பு சுவை, மிளகாயின் காரம், உப்பு, புளிப்பு எல்லாம் சேர்ந்து மிகவும் ருசியாக இருக்கும்.
பப்பாளிக்காய் பொரியல்:
பப்பாளிக்காயை சாம்பாரில் போடலாம். கூட்டு செய்யலாம். பொரியலாகவும் செய்து சாப்பிடலாம். ருசியாக இருக்கும்.
பப்பாளிக்காய் நறுக்கியது ஒரு கப்
சின்ன வெங்காயம் 6
தனியாத் தூள் ஒரு ஸ்பூன்
மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
உப்பு தேவையானது
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
தேங்காய் துருவல் 2 ஸ்பூன்
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கருவேப்பிலை
பப்பாளிக் காயை பிஞ்சும் இல்லாமல் ரொம்பவும் பழுத்தும் இல்லாமல் நடுத்தரமான பப்பாளிக்காயை தோல் சீவி அதனுள் இருக்கும் விதைகளையும் எடுத்துவிட்டு பொடியாக நறுக்கவும். வாணலியில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் கலர் மாறியதும் பப்பாளிக்காயை அதனுடன் சேர்த்து தேவையான உப்பு, மஞ்சள் தூள் போட்டு ஒரு கை நீர் தெளித்து கலந்து தட்டைப் போட்டு மூடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு வெந்ததும் தனியா தூள், மிளகாய் தூள், பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் சேர்த்து கலந்து இறக்க மிகவும் ருசியான பப்பாளிக்காய் பொரியல் தயார்.